சுற்றுச்சூழல்

குப்பைத் தொட்டியா தாமிரபரணி?

அ.அருள்தாசன்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் பெருவெள்ளத்துக்கு பின் தாமிரபரணி கரைகளில் குப்பைகள் அதிகளவில் குவிந்துகிடக்கின்றன. அவற்றை அகற்ற இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி, சமவெளி பகுதிகளில் 126 கி.மீ பயணித்து தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் பகுதியில் கடலில் கலக்கிறது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட விவசாயத்துக்கு பேருதவியாகவும் தாமிரபரணி விளங்குகிறது. ஆனால், தாமிரபரணி கரையோரத்தை திறந்தவெளி கழிப்பிடமாக்குவதும், கழிவுகளை கொட்டும் குப்பைத் தொட்டியாக்குவதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

கடந்த மாதம் 17, 18-ம் தேதிகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த அதிகனமழையால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோர பகுதி குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. வெள்ளத்தில் மரக்கட்டைகள், செடி, கொடிகளுடன் குப்பைகளும், கழிவுகளும் அடித்து வரப்பட்டிருந்தன.

ஆற்றில் வெள்ளம் தணிந்தபின் குப்பைகளும், கழிவுகளும் ஆற்றங்கரையில் ஆங்காங்கே தேங்கிவிட்டன. பிளாஸ்டிக் கழிவுகள் ஆற்றங்கரையோர மரங்களிலும், முட்புதர்களிலும் சிக்கி அதிகளவில் தேங்கிவிட்டன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. படித்துறைகளையொட்டி தேங்கியுள்ள குப்பைகளால் ஆற்றில் குளிக்க வருவோர் அவதிப்படுகின்றனர்.

வெள்ளம் தணிந்து 1 மாதமாகியும் ஆற்றங்கரையில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற அரசும், ஆட்சியாளர்களும் முன்வராதது குறித்து சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து இயற்கை ஆர்வலர் எஸ்.பி. முத்துராமன் கூறியதாவது: வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு தாமிரபரணி கரைகளில் தேங்கியுள்ள குப்பைக் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். பொருநை பெயரில் விழாக்கள் எடுக்கும் சூழலில் கழிவுநீரும், குப்பைகளும் தாமிரபரணியில் கலக்காமல் இருக்க, அந்தந்த பகுதி உள்ளாட்சி நிர்வாகங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

இது தொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுத்து, அந்த அறிக்கையை பொதுமக்கள் மத்தியில் வெளியிட வேண்டும். ஆற்று நீரின் மாசு குறித்து அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அரசுத்துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் அடங்கிய குழுவை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.

SCROLL FOR NEXT