ஓசூர்: சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 15 யானைகள் குறித்து கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப் பகுதியிலிருந்து 13 யானைகள் ஊடேதுர்கம் வனப் பகுதிக்கு இடம் பெயர்ந்து அருகே உள்ள விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இந்நிலையில் அந்த 13 யானைகளும் நேற்று அனுமந்த புரம், சினிகிரிப்பள்ளி வழியாக ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப் பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன.
ஏற்கெனவே சானமாவு வனப் பகுதியில் 2 யானைகள் முகாமிட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 13 யானைகளுடன் சேர்த்து 15 யானைகள் உள்ளன. யானைகளை ஒன்றிணைத்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு வனத்துறையினர் இடம் பெயரச் செய்ய உள்ளதால், யானைகளின் வழித்தடங்களான சானமாவு, பீர்ஜேப்பள்ளி, போடூர், ஆழியாளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.