சுற்றுச்சூழல்

கொடைக்கானலில் தாமதமாக தொடங்கிய உறை பனி காலம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

செய்திப்பிரிவு

கொடைக்கானல்: கொடைக்கானலில் தாமதமாக தொடங்கிய உறை பனிக் காலத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் வழக்கமாக டிசம்பர் முதல் பிப்ரவரி வரை உறை பனிக் காலமாக இருக்கும். கடந்த டிசம்பரிலும், இம்மாத தொடக்கத்திலும் மழை பெய்ததால் உறை பனி குறைந்து, அடர் பனி மூட்டம் நிலவியது. இந்நிலையில் கடந்த சில நாட் களாக வெப்பநிலை வெகுவாக குறைந்து கடும் குளிர் நிலவி வருகிறது. பகலில் அதிகபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும், இரவில் குறைந்த பட்சமாக 10 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவி வருகிறது.

இதனால் அதிகாலையில் உறை பனி படர்ந்து பசுமையான புல்வெளிகள் வெண் பட்டு போர்த்தியது போல் காட்சி அளிக்கிறது. திறந்தவெளியில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீதும் பனி படர்ந்து மூடி இருந்தது. ஏரியின் மேல் பகுதி தண்ணீரில் படர்ந்திருந்த பனிப் படலம் வெயில் பட்டவுடன் ஆவியாக மாறி வெளியேறுகிறது. பகலில் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் நிலவுகிறது. அதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு செல்கின்றன.

பனி மூட்டத்தால் பகல் 12 மணியளவிலேயே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த சீதோஷ்ண நிலையை சுற்றுலா பயணிகள் ரசித்து அனுபவிக் கின்றனர். கடும் குளிரில் இருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்காவில் நிழல் வலையால் தாவரங்களை மூடி தோட்டக்கலைத் துறையினர் பாதுகாத்து வருகின்றனர். உறை பனியால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT