கோவை: பல்வேறு நோய்களுக்கு பாரம்பரிய மூலிகை மருந்துகள் இருந்தாலும், சளி, இருமல், தும்மல் வந்தால் கூட உடனடி நிவாரணம் வேண்டுமென கருதி, அலோபதி மருந்துகளையே பலரும் நாடுகிறோம்.
இதனால் மருத்துவ செலவுகள் வருவதோடு, நாளடைவில் பக்கவிளைவுகளும் வருகின்றன. இந்நிலையில், மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வனத்துறை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வட கோவை, அவிநாசி லிங்கம் மகளிர் உயர் கல்வி நிறுவனம் அருகே, பாரதி பூங்கா சாலையில் உள்ள வனமரபியல் கோட்ட அலுவலக வளாகத்தில் மூலிகை நாற்றுகள் மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக கோவை வனமரபியல் கோட்ட துணை வனப் பாதுகாவலர் ராஜ்மோகன், வனச்சரக அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் கூறியதாவது: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பழங்குடியினரின் உதவியுடன் இதுவரை 413 வகையான மூலிகை செடிகளை சேகரித்து, வனத்துறையின் ஆழியாறு மூலிகை பண்ணையில் அவற்றை பெருக்கி பொதுமக்களுக்கு வழங்கி வருகிறோம். அங்கு, தற்போது சுமார் 15 ஆயிரம் மூலிகை நாற்றுகள் உள்ளன. ஒரு நாற்றை வளர்த்தெடுக்க பணியாளர்கள் 6 மாத உழைப்பை செலுத்த வேண்டியுள்ளது.
ஒவ்வொரு நாற்றுக்கும் ரூ.30 வரை உற்பத்தி செலவாகிறது. இருப்பினும், தற்போது நாராயண சஞ்சீவி, தொழுகன்னி, மஞ்சள் கரிசாலை, மந்தாரை, கேசவர்த்தினி, சங்குப்பூ, ஓரிதழ் தாமரை, கருந்துளசி, முடக்கத்தான், இன்சுலின், வெற்றிலை, ஆடா தொடை, பொன்னாங்கன்னி, வல்லாரை, மருதாணி, ரணகள்ளி, பூனை மீசை உள்ளிட்ட 55 வகையான மூலிகை நாற்றுகள் ரூ.5 முதல் ரூ.7.50-க்கு விற்பனை செய்யப் படுகின்றன. பெரிய பைகளில் உள்ள நாற்றுகள் ரூ.12.50-க்கு விற்கப்படுகின்றன.
ஆன்லைனில் வழங்க திட்டம்: தற்போது நேரடியாக மக்கள் வந்து நாற்றுகளை பெற்றுச் செல்ல வேண்டும். நேரில் வர முடியாதவர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் விநியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்தவும் முடிவு செய்துள்ளோம். வரும் நாட்களில் சதுரகிரி, கொல்லிமலை உள்ளிட்ட இடங்களில் இருந்தும் பழங்குடியினரின் உதவியுடன் அரிய வகை மூலிகை செடிகளை பெறும் திட்டமும் உள்ளது. இதுதவிர, ஒவ்வொரு வாரமும் ஒரு அரசு பள்ளியைச் சேர்ந்த மாணவர்களை அழைத்து வந்து மூலிகை செடிகளின் மகத்துவம் குறித்து விளக்க உள்ளோம். மூலிகை நாற்றுகள் தேவைப்படுவோர் கூடுதல் விவரங்களுக்கு 99943 14145 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
வீட்டுக்கு 5 செடிகள் தேவை: இந்திய பாரம்பரிய மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளரும், வைத்தியருமான தேவசகாயம் கூறும்போது, “ஒவ்வொரு வீட்டிலும் துளசி, கற்பூரவல்லி, தூதுவளை, பிரண்டை, செம்பருத்தி என குறைந்தபட்சம் 5 மூலிகை செடிகளாவது இருக்க வேண்டும். இடம் இருப்பவர்கள் அதிக வகையான மூலிகை செடிகளை வளர்க்கலாம். பெரிதாக அவற்றுக்கு பராமரிப்போ, தண்ணீரோ தேவையில்லை. எனவே, வனத்துறை மானிய விலையில் அளிக்கும் நாற்றுகளை வாங்கி மக்கள் பயன்பெற வேண்டும். தினந்தோறும் டீ, காபி அருந்துபவர்கள் அதை தவிர்த்துவிட்டு, செம்பருத்தி பூவை தண்ணீரில் கொதிக்கவைத்து செம்பருத்தி டீ அருந்தலாம். இதனால் இதயநோய்கள் வராது. ரத்தம் சுத்திகரிப்பாகும்” என்றார்.
வேட்டை தடுப்பு முகாம்களில் மூலிகை வளர்ப்பு: அடர் வனப்பகுதிகளில் உள்ள வேட்டை தடுப்பு முகாம்களில் தங்கி வனப் பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மருத்துவமனைகளை உடனே அணுக முடியாத இடங்களில் அவர்கள் இருப்பதால், சளி, காய்ச்சல், இருமல், பூச்சிகடி, காயங்களால் பாதிக்கப்படும்போது முதலுதவி சிகிச்சை பெறும் வகையில் கோவை வனக்கோட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனச்சரகங்களில் உள்ள வேட்டை தடுப்பு முகாம்களில் மூலிகை செடிகளை வளர்க்க முடிவு செய்துள்ளதாக வனத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.