குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது.
இதனால், எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனி மூட்டம் சூழ்ந்து கொள்வதால், முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்களை ஓட்டுநர்கள் இயக்கு கின்றனர். இந்நிலையில், குன்னூர் - மேட்டுப் பாளையம் மலை ரயில் பாதையில், குகைக்குள் கூட்டமாக நின்ற காட்டு மாடுகளால், மலை ரயிலை இயக்க முடியாமல் பாதியில் நிறுத்தப்பட்டது.
பின்னர் ஒலி எழுப்பி காட்டு மாடுகள் விரட்டப்பட்ட பிறகு, 40 நிமிடங்கள் தாமதமாக மலை ரயில் குன்னூர் வந்தடைந்தது. கடும் பனி மூட்டத்தின் இடையே பயணம் மேற்கொண்டது புதிய அனுபவமாக இருந்ததாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.