உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணாறு செல்லும் சாலை, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் நடுவே அமைந்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இவ்வழியாக கேரளாவுக்கு செல்கின்றன. அதேபோல் எதிர் மார்க்கமாகவும் தினமும் ஏராளமான வாகனங்கள் இயக்கப் படுகின்றன. கடந்த சில நாட்களாக இந்த சாலையில் பகல் நேரத்திலேயே யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இது குறித்து சூழல் ஆர்வலர்கள் கூறும்போது, "காட்டு விலங்குகளை மனிதர்கள் தொந்தரவு செய்யாத வரை, அவை ஏதும் செய்வதில்லை. மனிதரால் ஆபத்து நேருமோ என்ற அச்சம் காரணமாகவே அவை தாக்க முற்படும். இரவு, பகலாக கண்காணிப்பு பணிகளில் ஊழியர்களை வனத் துறை ஈடுபடுத்த வேண்டும். அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் செல்பி எடுக்கவும், புகைப் படங்கள் எடுக்கவும் முயற்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.