கொடைக்கானல்: கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக கொடைக்கானல் மலைப் பகுதியில் சிலுவைப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. கொடைக்கானல் மலைப் பகுதியில் அரிய வகை பூச்செடிகள், தாவரங்கள், மரங்கள் உள்ளன. குறிப்பாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் பேர்ட் ஆஃப் பாரடைஸ், செர்ரி மரம் போன்ற பல வகையான மலர்கள் பூத்துக் குலுங்குவது வழக்கம். நாளை மறுநாள் (டிச.25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்துமஸை கொண்டாடுவதற்காக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் கிறிஸ்தவர்களின் அடையாளமான சிலுவை வடிவிலான பூக்கள் தற்போது கொடைக்கானல் மலைப் பகுதியில் பல இடங்களில் பூத்துக் குலுங்குகின்றன.
சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் வண்ணங்களில் கொத்துக் கொத்தாய் பூத்துக் குலுங்கும் இப்பூக்கள் காண்போர் கண்ணுக்கு விருந்தாக அமைந்துள்ளன. இப்பூக்களை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து, புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.