சுற்றுச்சூழல்

பழநி வனப்பகுதிக்குள் நுழைந்தால் தண்டனை: வனத்துறை எச்சரிக்கை

செய்திப்பிரிவு

பழநி: பழநியில் வரதமாநதி அணை அருகே வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பழநி அருகே கொடைக்கானல் மலையடிவாரத்தில் வரதமாநதி அணை உள்ளது. இந்த அணையை கண்டு ரசிக்க விடுமுறை நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். இங்குள்ள பூங்கா போதிய பராமரிப்பின்றி உள்ளது. இதுமட்டுமின்றி, போதிய கண்காணிப்பு இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது.

அணையை சுற்றி பார்க்க வரும் சிலர் அணைப் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். வனப்பகுதியில் எந்நேரமும் வன விலங்குகள் வரும் அபாயம் உள்ளது. ஆகவே தடையை மீறி வனப்பகுதிக்குள் நுழைவோர் ஆபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

இதை தடுக்கும் வகையில் வரதமாநதி அணையின் நுழைவு வாயிலில் ஒட்டன்சத்திரம் வனத் துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அணையை சுற்றி பார்க்க வரும் மக்கள் அணைப் பகுதி மற்றும் தார்ச்சாலை தவிர வனப்பகுதிக்குள் அத்துமீறி உள்ளே நுழையவோ, மது அருந்தவோ, புகை பிடிக்கவோ கூடாது. மீறினால் வனச்சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT