ஓசூர்: கர்நாடக மாநிலம் பன்னர் கட்டா உயிரியல் பூங்காவிலிருந்து 150-க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த வாரம் ஜவளகிரி வழியாக தாவரக்கரை, நொகனூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய வனப்பகுதிகளுக்கு வலசை வந்தன.
இந்த யானைகள் 3 குழுக்களாகப் பிரிந்து வனத்தையொட்டி உள்ள விளை நிலங்களை சேதப்படுத்தி வந்ததால், பிரிந்து சென்ற யானைகளை ஒன்று இணைத்து மீண்டும் கர்நாடக மாநிலத்திற்கு விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் கடந்த இரு தினங்களுக்கு முன் 60 யானைகள் தாவரக்கரையிலிருந்து தேன்கனிக்கோட்டை வழியாக ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தன.
இந்த யானைகளை வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டினர். இதனால் வனத்துறையினரும், விவசாயிகளும் நிம்மதியடைந்த நிலையில், நேற்று காலை யானைகள் மீண்டும் சாலையை கடந்து சானமாவு வனப்பகுதிக்கு திரும்பி வந்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது; சானமாவு மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் தற்போது ஏராளமான விவசாயிகள் கேழ்வரகு சாகுபடி செய்துள்ளனர். தற்போது கேழ்வரகு பால் முற்றும் நிலையில் உள்ளது. இதனை சாப்பிட யானைகள் மீண்டும் மீண்டும் சானமாவுக்கு திரும்பி வருகின்றன. முதலில் 20 யானைகள் வந்த நிலையில் நேற்று முன்தினம் 60 யானைகள் வந்துள்ளன.
இந்த யானைகளை வனத்துறையினர் விரட்டினாலும், அடுத்த நாள் காலை மீண்டும் அதே இடத்துக்கு திரும்பி வருகின்றன. கேழ்வரகு அறுவடை சீசன் முடியும் வரை யானைகள் தங்கள் கிராமத்தைவிட்டு வெளியே செல்லாது. எனவே வனத்துறையினர் சானமாவு வனப் பகுதியையொட்டி கிராமங்களுக்குள் யானைகள் வராமல் இருக்க கண்காணித்து தடுக்க வேண்டும், என்றனர்.