ஓசூர்: தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து சானமாவு வனப்பகுதிக்கு யானைகள் படையெடுத்து வந்துள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா உயிரியல் பூங்காவிலிருந்து ஓசூர் வனச்சரகத்துக்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் யானைகள் கூட்டம் கூட்டமாக வலசை வருவது வழக்கம். அதேபோல் கடந்த மாதம் ஜவளகிரி வழியாக தாவரக்கரை, நொகனூர், தேன்கனிக் கோட்டை,அஞ்செட்டி ஆகிய வனப் பகுதிகளுக்கு 100 யானைகள் வலசை வந்துள்ளன. அந்த யானைகள் 3 குழுக்களாக பிரிந்து சென்று வனத்தையொட்டி உள்ள விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.
அதே போல் கடந்த வாரம் சானமாவு பகுதிக்கு 20 யானைகள் இடம் பெயர்ந்தன. இந்த யானைகளை வனத் துறையினர் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு இடம் பெயரச் செய்தனர். இதில் தாவரக்கரை பகுதியில் 40 யானைகள் முகாமிட்டிருந்தன. இந்த யானைகளை ஜவளகிரி வழியாக மீண்டும் பன்னர் கட்டா வனப்பகுதிக்கு இடம் பெயரச் செய்யும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் யானைகள் திரும்பிச் செல்லாமல் மீண்டும் ஓசூர் வனக்கோட்டத்திலேயே முகாமிட்டுள்ளன. இந்நிலையில் தனித் தனியாக பிரிந்திருந்த யானைக் கூட்டங்களில் ஒன்று நேற்று முன்தினம் இரவு தேன்கனிக்கோட்டை வழியாக சானமாவு வனப்பகுதிக்கு படையெடுத்துள்ளது. இதனால், வனப்பகுதியையொட்டி உள்ள விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
60 யானைகளும் ஒரே இடத்தில் முகாமிட்டுள்ளதால், சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வனத்துறையினர் இரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர். மேலும் யானைகள் விளைநிலங்களுக்குச் செல்லாமல் இருக்க தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து இரவு நேரங்களில் யானைகளை தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு இடம்பெயரச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறும் போது, ஆண்டுதோறும் முட்டைகோஸ், பீன்ஸ், கேரட் போன்ற காய்கறி பயிர்களை சாகுபடி செய்து அறுவடை செய்யும் காலங்களில் யானைகள் கூட்டமாக வந்து சேதப்படுத்திவிட்டுச் செல்கின்றன. இதற்கு வனத் துறையினர் கொடுக்கும் இழப்பீடு போதுமானதாக இல்லை, மேலும் மனித உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையால், விவசாயம் செய்யவே ஆர்வம் குறைந்து வருகிறது.
தற்போது 60 யானைகள் வந்துள்ளன. இந்த யானைகளை விரட்ட போதுமான வன ஊழியர்கள் இல்லாததால் யானைகளை விரட்டினாலும் அது சுலபமாக மீண்டும் திரும்பி வந்துவிடுகின்றன. விளை நிலங்களும் மற்றும் மனித உயிர்களும் சேதமாகாமல் இருக்க கூடுதல் வனத்துறையினர் நியமித்து யானைகளை விரட்ட வேண்டும், எனக் கூறினர்.