கோவை: கோவையில் ‘அவுட்டு காய்’ எனப்படும் நாட்டு வெடியை கடித்த காட்டு யானை நாக்கு, தாடை எலும்புகள் சிதைந்து உயிரிழந்தது வன உயிரின ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட வரப்பாளையம் பகுதியில் கடந்த 29-ம் தேதி இரவு, 8 யானைகள் கொண்ட கூட்டத்துடன் உடல் மெலிந்த நிலையில் ஒரு ஆண் யானை இருப்பதை வனப்பணியாளர்கள் கண்டறிந்தனர். கூட்டத்துடனேயே தொடர்ந்து அந்த ஆண் யானை சுற்றிக் கொண்டிருந்ததால், வனப் பணியாளர்கள் அதனை கண்காணிக்க சிரமப்பட்டனர். தொடர்ந்து, வன கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பேரில், யானை வருவதற்கு வாய்ப்புள்ள வழித் தடங்களில் பழங்களில் மாத்திரைகள் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
ஆனால், யானை அப்பகுதிகளில் வெளி வராத காரணத்தால், கோவை மற்றும் பெரிய நாயக்கன் பாளையம் வனச் சரகங்களை சேர்ந்த வனப் பணியாளர்கள் யானையை கண்டறியும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட நாயக்கன் பாளையத்தில் உள்ள சிஆர்பிஎஃப் பயிற்சி கல்லூரி வளாக பகுதியில் அந்த யானை இறந்த நிலையில் கண்டறியப்பட்டது.
அதைத் தொடர்ந்து, யானையின் உடல் பிரேத பரிசோதனையை வன கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான குழுவினர் நேற்று மேற்கொண்டனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, “உயிரிழந்த யானைக்கு 9 வயது இருக்கும். அவுட்டு காயை கடித்த போது வெடித்ததால் யானையின் நாக்கு சிதைந்திருந்தது. யானையின் கீழ் தாடை எலும்பு உடைந்திருந்தது. மேல் அன்ன பகுதி கருகி இருந்தது. அதனால் உணவை அசைபோட முடியாமல் இருந்துள்ளது. யானைக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டு 3 வாரங்கள் இருக்கும். யானையின் மேல் அன்ன பகுதியின் மாதிரியானது ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது” என்றனர்.
கடும் நடவடிக்கை தேவை: இது தொடர்பாக வன உயிரின ஆர்வலர்கள் கூறும்போது, “விளைநிலங்களுக்குள் நுழையும் காட்டுப்பன்றிகளை கொல்லவும், அவற்றின் இறைச்சிக்காக வேட்டையாடவும் அவுட்டுகாய் எனப்படும் நாட்டுவெடியை சிலர் பயன்படுத்துகின்றனர். இவற்றை சிலநேரங்களில் கால்நடைகள், மான்கள், யானைகள் கடிக்கும்போது வெடித்து வாய் சிதறி உயிரிழப்புகள் ஏற்படுவது கோவையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் நடைபெறும் நான்காவது சம்பவம் இதுவாகும். ஆனால், இதுவரை இந்த சம்பவங்களில், அதற்கு காரணமானவர்கள் கண்டறியப்படவில்லை. கைதும் செய்யப்படவில்லை. வெடி பொருட்கள் சட்டத்தின் கீழ் சம்மந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறையினரும் இந்த வழக்குகளை பெரிதாக கண்டுகொள்வதில்லை. எனவேதான், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்றனர்.
கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட பன்னீர்மடை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பெண் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதை நேற்று வனப் பணியாளர்கள் கண்டறிந்தனர். அதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனை நடைபெற்றது. இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, உயிரிழந்த யானைக்கு 25 வயது இருக்கும். அதிதீவிர ரத்த சோகை காரணமாக யானை உயிரிழந்திருக்கிறது. யானை உயிரிழப்புக்கான உறுதியான காரணத்தை அறிந்து கொள்ள அதன் ரத்தம், உடல் பாக மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட உள்ளன” என்றனர்.