த
மிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டம் கடந்த ஆண்டு பரபரப்பாக நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலோர் நகரத்தைச் சேர்ந்தவர்கள். ஜல்லிக்கட்டு காளைகளையோ நாட்டு மாடுகளையோ பலரும் நேரில் பார்த்து இருந்திருக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு கம்பீரமான காங்கேயம் காளைகள், நாட்டு நாய், நாட்டுக் கோழிகளைப் பார்க்கும் வாய்ப்பு சென்னையிலேயே கிடைத்தது.
மென்பொருள் நிறுவனங்கள் நிறைந்திருக்கும் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த வாரம் முளைத்தது அந்த ‘இரு நாள் கிராமம்!’. ‘செம்புலம்’ நடத்திய அந்தக் கண்காட்சியை அப்படித்தான் வர்ணிக்க முடியும்.
கிராமங்களில் மட்டும் சொற்பமாக எஞ்சியிருக்கும் நம் நாட்டுக் கால்நடைகளை மக்களுக்கும் இளம் தலைமுறையினருக்கும் இந்தக் கண்காட்சி அறிமுகப்படுத்தியது. கொம்பு சீவப்பட்ட காளைகள், கறவை மாடுகள், சண்டைச் சேவல்கள், மேய்ச்சல் ஆடுகள், வேட்டை நாய்கள் எனப் பல கால்நடைகளை பலரும் ஆச்சரியம் பொங்கப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
மற்றொரு பக்கம் ‘இளம் காளை’களின் உறியடி, சிலம்பம் போன்ற வீர விளையாட்டுக்கள், பல்லாங்குழி, பரமபதம் போன்ற கிராமிய விளையாட்டுக்கள் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டிருந்தன. கண்களுக்கு மட்டும் விருந்தாக அமையாமல், வயிற்றுக்கும் நல் விருந்தாக அமைந்தது பாரம்பரிய உணவு தயாரிக்கும் சமையல் போட்டிகளும் சிறுதானிய உணவும்.
“விவசாயத்தையும், அதற்குப் பயன்படும் கால்நடைகளையும் மக்கள் மறந்துவரும் காலம் இது. இது குறித்தெல்லாம் நினைவுபடுத்தவே இந்தக் கண்காட்சியை ஏற்பாடுசெய்தோம். இதற்குக் கிடைத்த வரவேற்பு, நாங்கள் நினைத்ததைவிட அதிகமாக இருந்தது. வரும் ஆண்டுகளிலும் இதுபோன்ற நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்ய எங்களுக்கு ஊக்கம் கிடைத்துள்ளது” என்கிறார் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ராஜ மார்த்தாண்டன்.
- ச.ச.சிவசங்கர்