கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள சின்ன குப்பம் பகுதியில் நீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்கள். 
சுற்றுச்சூழல்

தொடர் மழையால் சேத்தியாத்தோப்பு அருகே 5,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

செய்திப்பிரிவு

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழையால், சேத்தியாத்தோப்பு அருகே 5,000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி, வயல்களுக்குள் வடிந்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் இருந்தும் வயல்வெளிகளை நோக்கி மழை நீர் பாய்ந்தோடுகிறது.

இந்நிலையில், புவனகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சேத்தியாத்தோப்பு அருகே வீரமுடையாநத்தம், சின்ன குப்பம்,பெரிய குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, “நீர்வளத் துறையின் விருத்தாசலம் பகுதிக்குஉட்பட்ட தர்மநல்லூர் வாய்க்காலைதூர் வார வேண்டும் என்று, சிலமாதங்களுக்கு முன் இப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வாய்க்கால் தூர் வாரப்பட்டது. ஆனால், அதன் தொடர்ச்சியாக உள்ள, சிதம்பரம் பகுதிக்கு உட்பட்ட சின்ன குப்பம் பகுதி வாய்க்கால் தூர்வாரப்படவில்லை. இதனால் வடிகாலின்றி ஒருபுறமாக மழைநீர் வடிந்து, இப்பகுதியில் வயல்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. வாய்க்காலை முன்பே தூர் வாரியிருந்தால் இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்காது” என்றனர்.

SCROLL FOR NEXT