சுற்றுச்சூழல்

வரையாடுகள் காக்கப்படுமா? - மிகக் குறைந்த எண்ணிக்கையில் தமிழக மாநில விலங்கு

செய்திப்பிரிவு

நாகர்கோவில்: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தமிழகம், கேரளா உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே வாழும் அரிய விலங்கினம் வரையாடு. இது தமிழக அரசின் மாநில விலங்கினம் என்ற பெருமை பெற்றது. நீலகிரி ஆடுகள் என்ற பெயருடன் கூடிய இந்த வரையாடுகளின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருகிறது. கேரளாவில் இரவிக்குளம் பகுதியிலும், தமிழகத்தில் நீலகிரி மலைப்பகுதிகள், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திலும், குமரி மாவட்டத்தை உள்ளடக்கிய களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட இடங்களில் இவை வாழ்கின்றன.

வரை என்பது மலை உச்சி மற்றும் பாறை சரிவுகளை குறிப்பதாகும். அதுபோன்ற இடங்களில் இந்த ஆடுகள் வசிப்பதால் வரையாடு என அழைக்கப்படுகிறது. மான் வகையைச் சேர்ந்த இதற்கு வருடை, காட்டு ஆடு, குறும்பாடு, ஐபெக்ஸ் என்ற பெயர்களும் உண்டு. சங்க பாடல்களில் மரையா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 1,200 மீட்டர் முதல் 2,500 மீட்டர் உயரமுடைய பாறைச் சரிவுகளில், குகைகளில் வாழும் வரையாடுகள் பழங்காலத்தில் மனிதர்களால் அதிகமாக வேட்டையாடப்பட்டது. இவற்றின் இனமே அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டது.

இதனால் கடந்த 1972-ம் ஆண்டு வன விலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி வரையாடு அழிந்துவரும் வன விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. தற்போதைய வனவிலங்குகள் கணக்கெடுப்பின்படி 3,122 வரையாடுகள் மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது. ஆங்கிலேயர்கள் வரையாடுகளை அதிகமாக வேட்டையாடியதுடன் அதன் வாழ்விடங்களான பசுஞ்சோலைகளை அழித்து பணப்பயிர்களை விளைவித்தது, அணைகள், மின் திட்டங்கள், வனசாலைகள் அமைத்தது, புல்வெளிகளில் பரவிய அந்நிய களைச்செடிகள் என, இதன் அழிவுக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

தமிழகத்தின் மாநில விலங்கான வரையாட்டை காக்க கோரி கன்னியாகுமரி மாவட்ட இயற்கை ஆர்வலர் சங்கரபாண்டியன் கன்னியாகுமரி ஆட்சியர் மற்றும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தார். இதற்கு கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா அளித்துள்ள பதிலில், “மேற்கு தொடர்ச்சி மலையில் 20-ம் நூற்றாண்டின் இறுதியில் 100 வரையாடுகள் இருந்தது. தற்போது 3,122 ஆக உயர் ந்துள்ளது. இவ்வினத்தை காக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் வரையாடுகள் வாழும் சூழலுடன் இருக்கும் நிலையிலும் இதுவரை 4,000 வரையாடுகள் கூட பெருகாமல் இருப்பது வன ஆர்வலர்களை கவலையடையச் செய்துள்ளது.

SCROLL FOR NEXT