திருவண்ணாமலை: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மலை போல் குவிந்துள்ள கழிவுகளால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனை அமைந்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளை கொண்டது. உள்நோயாளிகள், புற நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் என தினசரி 5 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். நோய் தீர்க்கும் மையமாக இருக்க வேண்டிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நோய்களை உருவாக்கும் கூடாரமாக உரு வெடுத்துள்ளது.
மருத்துவமனையில் சேகரிக்கப்படும் கழிவுகள், பிணவறை அருகே மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் புறநோயாளிகள் பிரிவு மற்றும் உள்நோயாளிகள் பிரிவு செயல்படுகிறது. இந்த பகுதியில் மட்டும், காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை, ஒவ்வொரு மணித்துளிகளும், சுமார் 300 பேர் வருவதும், செல்வதுமாக இருப்பார்கள். முக்கியத்துவம் வாய்ந்த, இப்பகுதியானது சுகாதாரமின்றி காட்சியளிக்கிறது.
மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் பைகள், மாத்திரை அட்டைகள், உணவு கழிவுகள் ஆகியவற்றை பிணவறை அருகேயும், இதன் தொடர்ச்சியாக உள்ள மிகப் பெரிய பள்ளத்தில் மலைபோல் குவிக்கப் பட்டுள்ளன. மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவுகளும் உள்ளன. இந்த கழிவுகளில் இருந்து ஈக்கள், கொசுக்கள், புழுக்கள் போன்றவை அதிகளவில் உற்பத்தியாகின்றன. இவைகள் அனைத்தும், மருத்துவ மனைக்குள் நுழைந்து நோயாளிகளை துன்பப் படுத்துகின்றன. மேலும், துர்நாற்றம் வீசுகிறது. ஊசிகள் சிதறி கிடக் கிறது.
டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவி வரும் நிலையில், மருத்துவமனை வளா கத்தில் கழிவுகள் குவிந்து கிடப்பது நோயாளிகளுக்கு அச் சத்தை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவ கழிவுகளை அகற்ற மருத்துவமனை நிர்வாகம் முனைப்பு காட்ட வில்லை. கழிவுகளை அகற்றுவது யாருக்கு பொறுப்பு உள்ளது என்பதில் மருத்துவமனை நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொள்கின்றன.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கேட்டபோது, “அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரி மருத்துவ கழிவுகளை அகற்றிவிடுகிறோம். நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் மூலம் சேரும் பிளாஸ்டிக் கழிவுகள், மருந்து பெட்டிகள், மாத்திரை அட்டைகள், உணவு கழிவுகள், நாப்கின் ஆகியவை பிணவறை அருகே கொட்டப்பட்டு வருகின்றன. இந்த கழிவுகளை வேங்கிக்கால் ஊராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து வேங்கிக்கால் ஊராட்சி நிர்வாகம் தரப்பில் கேட்டபோது, “அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து குப்பைகளை, ஊராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டிய அவசியமில்லை. வேங்கிக்கால் ஊராட்சியில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்களிடம் இருந்து சேக ரிக்கப்படும் குப்பையை அகற்றிச் சென்று, கொட்டு வதற்கு இடம் இல்லாமல் தொடர்ந்து அவதிப்படுகிறோம்.
வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே அகற்றி வருகிறோம். இப்படிப்பட்ட சூழலில், மருத்துவமனையில் சேரும் கழிவுகளை அகற்றி எங்கே கொட்டுவது. மருத்துவமனை நிர்வாகம் அழைக்கும்போது, பொக்லைன் இயந்திரம் கொண்டு சென்று, பிணவறை சாலையில் உள்ள கழிவுகளை பள்ளத்தில் தள்ளிவிடுவோம்” என்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூ., கண்டனம்: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மலைபோல் கழிவுகளை குவித்து வைத்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இக்கட்சியின், திருவண்ணாமலை ஒன்றிய செயலாளர் எஸ்.ராமதாஸ் கூறும்போது, “நோய்களை குணமாக்க வேண்டிய அரசு மருத்துவமனையே நோய் களை பரப்பும் நிலையமாக மாறிவிட்டது. மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வகையான கழிவுகளால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கழிவுகளை அகற்றுவதில் யாருக்கு? பொறுப்பு உள்ளது என தெரியவில்லை.
மருத்துவமனை நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் ஒருவரையொருவர் கைக்காட்டிக் கொள்கின்றனர். இதற்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனை நிர்வாகம், வேங்கிக்கால் ஊராட்சி மற்றும் திருவண்ணா மலை நகராட்சியை ஒருங்கிணைத்து, கழிவு களை அகற்றி தூய்மையாக வைத்திருக்க முன் வர வேண்டும்” என்றார்.
சுகாதாரத் துறை அலட்சியம்: நோயாளிகளின் உறவினர்கள் கூறும்போது, “வீடுகள், திருமண மண்டபங்கள், விடுதிகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலையில் கழிவுகள் தேக்கி வைக்கப்பட்டால் சுகாதாரத் துறை நடவடிக்கை மேற்கொள்கிறது. அபராதம் விதித்து, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்குகிறது. ஆனால், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கழிவு களை கண்டுகொள்ளாமல், சுகாதார துறை அலட்சியமாக உள்ளது.
மருத்துவமனையில் குவிந்துள்ள கழிவு களால், நோய் தொற்று ஏற்படாதா? மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை, உள்ளாட்சி துறை இணைந்து மருத்துவமனை வளாகத்தில் குவிந்துள்ள கழிவுகளை அகற்ற வேண்டும். மேலும், பிணவறை பின் பகுதியில் உள்ள பள்ளத்தில் கழிவுகளை தள்ளிவிடக்கூடாது” என்றனர்.