கோவை: கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வரப்பாளையம், சோமையனூர், பாப்ப நாயக்கன் பாளையம், சின்னத் தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் விளை நிலங்களில் காட்டு யானைகள் அவ்வப்போது நுழைவதாக, அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து, கடந்த 2018 டிசம்பர் 18-ம் தேதி ‘விநாயகன்’ என்ற காட்டு யானையை பிடித்த வனத்துறையினர் ‘ரேடியோ காலர்’ பொருத்தி, முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் விடுவித்தனர். நாளடைவில் அந்த ரேடியோ காலர் யானையின் கழுத்தில் இருந்து கழன்றுவிட்டது. இந்நிலையில், முதுமலை வனப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்த யானை, கர்நாடக மாநிலம் பந்திப்பூர் பகுதியில் உணவு தேடி அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து வந்தது.
இதையடுத்து, அந்த யானையை பிடிக்க முடிவு செய்த கர்நாடக வனத்துறையினர், கடந்த ஜூன் மாதம் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர், பந்திப்பூர் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ராம்புரா யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு, பயிற்சி அளிப்பதற்காக கராலில் (மரக் கூண்டு) யானை அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 31-ம் தேதி அந்த யானை திடீரென உயிரிழந்தது. இது, கோவையில் உள்ள வன உயிரின ஆர்வலர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக, கோவையைச் சேர்ந்த யானைகள் ஆர்வலர் ஆப்ரகாம் ராஜ் கூறியதாவது: தடாகம் பகுதியில் வாழ்ந்துவந்த ‘விநாயகன்’ யானையின் வாழ்க்கை முறையை பல ஆண்டுகளாக படம்பிடித்து வந்தேன். அப்போது, விநாயகன், சின்னதம்பி, பெரிய தம்பி என மூன்று யானைகள் அந்த பகுதியில் பிரபலமாக இருந்தன.
தற்போது இந்த மூன்று யானைகளுமே அங்கு இல்லை. சின்ன தம்பி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கோழிகமுத்தி யானைகள் முகாமில் கும்கியாக உள்ளது. பெரியதம்பி தற்போது ஜவளகிரியில் உள்ளது. இந்த மூன்று யானைகளும் கோவை வனக்கோட்டத்தில் இருந்த போது, அட்டப்பாடி பகுதியில் இருந்து யானைகள் கீழே வருவதற்கே பயந்தன.
அதிகமாக அந்த யானைகள் இங்கு வராது. இந்த யானைகள் இடம் மாற்றப்பட்ட பிறகு, நிறைய புதிய யானைகள் வரத்தொடங்கிவிட்டன. மனித-விலங்கு மோதலும் அதிகரித்து விட்டது. இந்த பகுதியில் இருந்த யானைகளிலேயே பெரிய உருவத்தை கொண்டிருந்தாலும், மனிதர்கள் யாரிடமும் ‘விநாயகன்’ மூர்க்கமாக நடந்து கொண்ட தில்லை.
உடன் வரும் யானைகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் இயல்பை கொண்டிருந்தது. இந்த யானை உயிரிழந்தது என்ற செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. யானைகளை இடமாற்றம் செய்வது என்பதுசவாலான விஷயம். பல நேரங்களில், இடம்மாற்றம் செய்யப்படும் யானைகள், அந்த சூழலுக்கு பழகுவதில்லை.
அவை உயிரிழப்பதற்கே வாய்ப்புகள் ஏற்படுகின்றன. விநாயகன் யானையை இடம்மாற்றிய பிறகு, தடாகம் பகுதியில் பயிர்களை யானைகள் சேதப்படுத்துவது குறைந்துள்ளதா என்றால், அதற்கானவிடை கேள்விக்குறியாகவே உள்ளது. மற்ற யானைகளால் அங்கு பயிர்கள் தொடர்ந்து சேதப்படுத்தப்பட்டே வருகின்றன. எனவே, யானைகளை இடமாற்றம் செய்வது என்பது தற்காலிக தீர்வாக வேண்டுமானால் அமையலாமே ஒழிய, நிரந்தர தீர்வாகாது. இவ்வாறு அவர் கூறினார்.