வால்பாறை: வால்பாறை எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ள மக்னா யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
பொள்ளாச்சியை அடுத்த சரளபதி கிராமப் பகுதியில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு விவசாய நிலங்களை சேதப்படுத்தி, பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மக்னா யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அதன்பின், வால்பாறையை அடுத்த சின்னக் கல்லாறு வனப் பகுதியில், கடந்த ஜூலை மாதம் மக்னா யானையை விடுவித்தனர்.
இந்நிலையில் வால்பாறை பகுதியிலுள்ள சின்னக்கல்லாறு, கருமலை, பச்சமலை, குரங்குமுடி, சிவா காபி எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டுள்ள மக்னா யானை, கடந்த ஒரு வாரமாக சக்தி எஸ்டேட் பகுதியில் உலா வருகிறது. அங்கு தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வாழை, பலா, கொய்யா ஆகியவற்றை உட்கொண்டது. இதனால், சக்தி - தலநார், மகா லட்சுமி எஸ்டேட் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, "வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் முகாமிடும் மக்னா யானை, யாரையும் தொந்தரவு செய்வதில்லை. பகல் நேரத்தில் வனப்பகுதியிலும், இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியிலும் முகாமிடுகிறது. மக்னா யானை மீண்டும் டாப்சிலிப் வழியாக சமவெளி பகுதிக்கு செல்ல வாய்ப்புள்ளதால், அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம்" என்றனர்.