உதகை: நீலகிரி மாவட்டம் உதகை ரயில் நிலையப் பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளால் சர்ச்சை எழுந்துள்ளது. ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள ஈர நிலத்தை மீட்டெடுக்க இயற்கை ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஏற்கெனவே, அங்கு ரயில்வே ஊழியர்கள் பயிற்சி மையத்துக்காக கட்டிடங்கள் கட்டப்பட்டன. பின்னர் மண்ணின் தன்மை கான்கிரீட் கட்டமைப்புகளின் எடையை தாங்குவதற்கு பொருந்தாததால், அந்த திட்டத்தை ரயில்வே நிர்வாகம் கைவிட்டது. தற்போது, மீண்டும் புதிய கட்டுமானப் பணிகளை ரயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ளது.
நீலகிரி மாவட்ட சூழலியல் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் தெற்கு ரயில்வேயின் செயலைக் கண்டித்தும், உடனடியாக கட்டுமானப் பணியை தடுக்க வலியுறுத்தியும் உதகை ரயில் நிலைய அதிகாரிகள், மாவட்ட வன அலுவலருக்கு மனு அளிக்கப்பட்டது. நம்ம நீலகிரி அமைப்பு நிர்வாகி ஷோபனா சந்திர சேகர், தேசிய பசுமைப் படை கள அலுவலர் வி.சிவதாஸ், உலகளாவிய வன விலங்குகள் நிதியமைப்பு அமைப்பாளர் மோகன் ராஜ், உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்கத் தலைவர் ஜனார்த்தனன் மற்றும் பல்வேறு சூழலியல் ஆர்வலர்களும் மனு அளித்தனர்.
இது தொடர்பாக இயற்கை ஆர்வலர்கள் கூறும்போது, "உதகை ரயில் நிலையத்தில் பயிற்சி மையத்தின் கட்டுமானம் எதிர்ப்புகளை மீறி, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. முன்பு 2.5 ஏக்கர் சதுப்பு நிலம், பலவகையான பறவைகள் மற்றும் தாவர உயிரினங்களின் இருப்பிடமாக இருந்தது.
இன்றுவரை, இப்பகுதி நீலகிரியின் பூர்வீக பழங்குடியினரான தோடர்களின் கால்நடைகளான எருமைகளின் மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தப் படுகிறது. இருப்பினும், ஈர நிலத்தில் ஒரு சில கட்டிடங்கள் கட்டப்பட்ட பிறகு, நிரந்தர கான்கிரீட் கட்டமைப்புகளை தாங்குவதற்கு மைதானம் பொருத்தமற்றது என்பது ரயில்வேக்கு தெளிவாக தெரிந்தது.
இதனால், அவர்கள் திட்டத்தை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நிரந்தர கட்டமைப்புகள் கட்டுவதற்கு அந்த நிலம் பொருத்தமற்றது என்பதை ரயில்வே அறிந்திருக்க வேண்டும். அருகிலேயே மற்ற அரசு கட்டிடங்களும் உள்ளன. அவை அப்பகுதியிலுள்ள மண்ணின் சதுப்பு தன்மை காரணமாக, தரையில் புதைந்துள்ளன" என்றனர்.
தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, "அமிர்த பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ், உதகை ரயில் நிலையம் முழுவதும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு வருகிறது. கட்டிடங்களும் மறுவடிவமைப்பு செய்யப்படும்" என்றனர்.
உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்கத் தலைவர் ஜெ.ஜனார்த்தனன் கூறும்போது, "உதகை ரயில் நிலையப் பகுதியில் ஈரநிலத்தை வகைப் படுத்திய தாவரங்கள் மற்றும் புற்களை மீட்டெடுக்க வேண்டும். இது உள்ளூர் மக்களுக்கு பயனளிக்கும். மேலும், அப்பகுதி குப்பை கொட்ட பயன்படுத்தப்படுவதை தடுக்கலாம்" என்றார்.