ஓசூர்: தமிழக வனப்பகுதியில் கர்நாடக மாநில யானைகள் வலசை தொடங்கியுள்ளன. இதனிடையே, உரிகம் வனப்பகுதியில் சுற்றும் ஒற்றை யானையால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஓசூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம், ஜவளகிரி ஆகிய வனப் பகுதிகளுக்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் கர்நாடக மாநிலம் பன்னர் கட்டா உயிரியல் பூங்காவிலிருந்து யானைகள் வலசை வருவது வழக்கம். இந்நிலையில், தற்போது, கடந்த சில நாட்களாக கர்நாடக மாநில வனத்திலிருந்து யானைகள் கூட்டம், கூட்டமாக ஓசூர் வனக்கோட்டப் பகுதிக்கு வலசை வரத் தொடங்கியுள்ளன.
இதனிடையே, வனத்தை யொட்டியுள்ள விளை நிலங்களில் பயிரிடப்பட்டு அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ள ராகி, நிலக்கடலை, எள் உள்ளிட்ட பயிர்களை யானைகளிடமிருந்து பாதுகாக்க விவசாயிகள் இரவு நேரங்களில் வயல்களில் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உரிகம் மலைக் கிராம வனப்பகுதியில் கடந்த 3 நாட்களாக ஒற்றை ஆண் யானை முகாமிட்டு சுற்றி வருகிறது. மேலும், இரவு நேரத்தில் வனப் பகுதியை விட்டு வெளியில் வரும் ஒற்றை யானை அப்பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்துப் பயிர்களைச் சேதப்படுத்தி வருகிறது. இதனால், விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: வானம் பார்த்த பூமியாக உள்ள மானாவாரி விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை யானைகள் வலசை தொடங்கும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்துக்கு முன்னர் அறுவடை செய்து விடுவோம். நிகழாண்டில், போதிய பருவ மழை இல்லாததால், குறிப்பிட்ட மாதத்தில் சாகுபடி பணியில் தாமதம் ஏற்பட்டதால், அறுவடை தாமதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது, கேழ் வரகு பயிரில் பால் பிடிக்கும் நிலையில் வன விலங்குகளிடமிருந்து பயிரைக் காக்க இரவு, பகலாக கண்காணித்துக் காவல் பணியில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த 3 நாட்களாக ஒற்றை யானை விளை நிலத்தில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவதை எங்களால் கட்டுப் படுத்த முடியவில்லை. மேலும், ஒற்றை யானை குறித்து வனத்துறைக்குத் தகவல் அளித்தோம்.
ஆனால், யானையை வனப்பகுதிக்கு விரட்டவும், கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கிராம மக்கள் ஒன்றிணைந்து இரவு நேரத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு ஒற்றை யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இருப்பினும் யானையை வனப் பகுதிக்கு விரட்ட முடியவில்லை.
யானையை விரட்டும்போது, அசம்பாவிதம் ஏற்படுமோ என எங்களுக்கு அச்சமாக உள்ளது. கஷ்டப்பட்டுப் பயிரிட்டு, பாதுகாத்து வந்த பயிர்களை யானை மற்றும் காட்டுப் பன்றிகள் சேதப்படுத்துவது வேதனையாக உள்ளது. விவசாயிகள் நலன் கருதி ஒற்றை யானையை கண்காணித்து வனப் பகுதிக்கு விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுப்பதோடு,
வரும் நாட்களில் வலசை வரும் யானைகளால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க தொடர்ந்து கண்காணித்து மனித உயிர்களுக்கும், பயிருக்கும் உரிய பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.