பேரளி கிராமத்தில் மான், காட்டுப்பன்றி ஆகிய வன விலங்குகளால் சேதப்படுத்தப்பட்ட மக்காச்சோள பயிர்கள். 
சுற்றுச்சூழல்

பயிர்களை வதம் செய்யும் வன விலங்குகள் - மகசூல் பாதிப்பால் விவசாயிகள் வேதனை @ பெரம்பலூர்

அ.சாதிக் பாட்சா

திருச்சி: பெரம்பலூர் மாவட்டத்தில் காப்புக்காடுகளை ஒட்டியுள்ளவிவசாய நிலங்களில் வன விலங்குகள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர். எனவே, இதற்காக நிவாரணத்தை உயர்த்தி வழங்குவதுடன், வன விலங்குகள் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் 64,866 ஹெக்டேர் பரப்பளவில் பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயம் உற்பத்தியில் மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் சிறப்பிடம் வகிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் பற்றாக்குறை, பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதல், தரமற்ற விதை போன்ற காரணங்களால் சாகுபடி பாதிக்கப்பட்டு நஷ்டத்தைச் சந்தித்து வந்த விவசாயிகளுக்கு நிகழாண்டு பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகள் சவாலாக உள்ளன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், மரவள்ளி, எலுமிச்சை, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் சேதப்படுத்தி வருகின்றன.

தண்ணீர், உணவுத் தட்டுப்பாடு: இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வீ.நீலகண்டன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை, ஆலத்தூர், குன்னம் ஆகிய பகுதிகளில் உள்ள காப்புக்காடுகளில் மான், காட்டுப்பன்றி, குரங்கு, மயில்கள் உள்ளிட்டவை அதிகளவில் உள்ளன. வனப்பகுதியில் தண்ணீர் மற்றும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக, இந்த விலங்குகள் காப்புக் காடுகளை ஒட்டியுள்ள வயல்களுக்குள் புகுந்து பயிர்களை சாப்பிட்டு சேதப்படுத்திவிட்டு சென்று விடுகின்றன. இதனால் மகசூல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.

காட்டுப்பன்றிகளை விரட்ட அரசு பரிந்துரைக்கும் இயற்கை தெளிப்பான், பேட்டரியில் இயங்கு மின்வேலி போன்றவை போதிய பலனை தருவதில்லை. முள் கம்பி வேலிகளையும் சாய்த்துவிட்டு வன விலங்குகள் வயல்களுக்குள் புகுந்துவிடுகின்றன. இதனால் விவசாயிகள் விடிய விடிய வயல்களில் தங்கி வன விலங்குகளை விரட்டும் நிலை ஏற்படுகிறது. மேலும், சேதமடைந்த பயிர்களுக்கு அரசு வழங்கும் நிவாரணம் மிகக் குறைவாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை உயர்த்தாமல் இப்போதும் ஏக்கருக்கு ரூ.500, ரூ.1,000 மட்டுமே வழங்கப்படுகிறது.

எனவே, ஒரு பயிருக்கு வங்கிகளில் வழங்கப்படும் கடன் தொகைக்கு நிகரான தொகையை நிவாரணமாக வழங்க வேண்டும். மேலும், வன விலங்குகள் மூலம் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில், அரசு தொலைநோக்கு திட்டம் தீட்டி அதை செயல்படுத்தி விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் குகனேஷிடம் கேட்டபோது அவர் கூறியது: பெரம்பலூர் மாவட்ட வனப்பகுதிகளின் வெளிப்பரப்பில் வசிக்கும் வன விலங்குகளில் எண்ணிக்கை பெருகி விட்டதால், அவை உணவு, தண்ணீர் உள்ளிட்ட தேவைகளுக்காக வயல்களுக்குள் புகுந்துவிடுகின்றன. வன விலங்குகள் பயிர்களை நாசம் செய்தால், அது குறித்த தகவலை 24 மணி நேரத்துக்குள் வனத் துறைக்கு தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் வயலை ஆய்வு செய்து நிவாரணத் தொகை வழங்க முடியும்.

அகழிக்கு வாய்ப்பில்லை: கடந்த ஆண்டு 22 பேருக்கு ரூ.1.36 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. நிகழாண்டு இதுவரை 9 பேருக்கு ரூ.1.10 லட்சம் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகள் வராமல் தடுப்பதற்கு வேலி அமைத்தல், அரசு பரிந்துரைக்கும் காட்டுப்பன்றி விரட்டி திரவம் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

யானை போன்ற வன விலங்குகள் உள்ள பகுதிகளில்தான் அகழி அமைக்க முடியும். பெரம்பலூர் மாவட்டத்தில் அகழி அமைக்க முடியாது. வன விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு ஆபத்தான மின் வேலி அமைப்பதும் இயலாத காரியம். வேறு திட்டங்கள் குறித்து பரிசீலித்து அரசுக்கு பரிந்துரைக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT