தண்டையார்பேட்டை மண்டலம், 37-வது வார்டு கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரில், கேப்டன் காட்டன் கால்வாயில் ஆம்பிபியன் இயந்திரம் மூலம் ஆகாயத் தாமரை செடிகள் அகற்றப்பட்டு வரும் நிலையில், கைகளாலும் செடிகளை அகற்றும் மாநகராட்சி மலேரியா பணியாளர். | படங்கள்: ச.கார்த்திகேயன் 
சுற்றுச்சூழல்

வீணாகும் மனித ஆற்றல், விரயமாகும் மாநகராட்சி நிதி... - கண்காணிப்பை தீவிரப்படுத்த சென்னை மக்கள் கோரிக்கை

ச.கார்த்திகேயன்

சென்னை: சென்னை மாநகரில் கொசுத் தொல்லை தவிர்க்க முடியாத பிரச்சினையாக இருந்து வருகிறது. கொசு ஒழிப்பு பணியில் 3 ஆயிரத்து 300 மலேரியா பணியாளர்கள் ஆண்டு முழுவதும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் வீடு வீடாக கொசுப்புழு உற்பத்தியாகிறதா என ஆய்வு செய்வது, கொசுப்புழு உற்பத்தியாக வாய்ப்புள்ள நீர் மற்றும் கழிவுநீர் தேங்கும் மாநகராட்சியின் மழைநீர் வடிகால் போன்றவற்றில் கொசுப்புழு கொல்லிகளை தெளிப்பது, முதிர் கொசுக்களை ஒழிக்க புகை பரப்பும் இயந்திரங்களை கையாள்வது போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.

சென்னை மாநகரில் உள்ள கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் இதர 30-க்கும் மேற்பட்ட கால்வாய்களில் கொசுப்புழு உற்பத்தியை கட்டுப்படுத்தவும், அங்கு கொசு உற்பத்திக்கு காரணமான ஆகாயத்தாமரை செடிகளை அகற்றவும் மலேரியா பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மாநகராட்சி சார்பில் படகுகளும் வாங்கப்பட்டு, அதன் மூலமாகவும் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும், ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற 4 ரோபோடிக் இயந்திரங்கள், நீரிலும் நிலத்திலும் இயங்கும் 3 சிறிய மற்றும் 2 பெரிய ஆம்பிபியன் இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

ஆறுகள் மற்றும் கால்வாயில் ஆகாயத்தாமரை செடிகளை இயந்திரத்தால் மட்டுமே முழுமையாக அகற்ற முடியும். ஆனால் மாநகராட்சி, ஒன்றிரண்டு பணியாளர்களை நியமித்து தினமும் அகற்றி வருகிறது. தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள கேப்டன் காட்டன் கால்வாயில் பருவமழைக்கு முன்பும், முடிவுக்கு வந்த பிறகு கொசுத்தொல்லை அதிகரிக்கும்போதும் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு ஒருசில வாரங்கள் மட்டுமே ஆகாயத்தாமரை செடிகள் இல்லாமல் இருக்கும்.

ஆண்டின் பெரும்பாலான நாட்களில் கழிவுநீர் நிறைந்து, ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்தே காணப்படும். 37-வது வார்டு கிருஷ்ணமூர்த்தி நகர் பகுதியில் ஆண்டின் பெரும்பாலான நாட்களில் மாநகராட்சி பணியாளர் ஒருவர், தனியொருவராக துறட்டு கோல் கொண்டு ஆகாயத்தாமரை செடிகளை கையால் அகற்றி வருகிறார். அவரால் இதுவரை முழுமையாக அகற்ற முடிந்ததில்லை.

இதேபோன்று முல்லை நகர் மயானம் அருகில் படகில் சென்று அகற்ற, என்யூஎல்எம் திட்டத்தில் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தினமும் அகற்றி வந்தாலும், முழுமையாக அகற்றியதில்லை. இருப்பினும் இவர்களுக்கு ஆண்டு முழுவதும் பணி வழங்கப்படுகிறது.

கேப்டன் காட்டன் கால்வாயில் சில மாதங்களுக்கு முன்பு படகு மூலம்
செடிகளை அகற்றிய மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்.

தற்போது பருவமழைக்கு முன்னதாக வெள்ளநீர் வழிந்தோடும் வகையில் கேப்டன் காட்டன் கால்வாயில் ஆகாயத்தாமரை செடிகளை ஆம்பிபியன் இயந்திரம் மூலமாக அகற்றி வருகின்றனர். இன்னொரு பக்கம், ஏற்கெனவே தனியொருவனாக நியமிக்கப்பட்ட மலேரியா பணியாளரும் வழக்கம்போல துறட்டுகோலால் அகற்றி வருகிறார். இயந்திரத்தை அனுப்பிய பிறகு, மாநகராட்சி இவருக்கு வேறு பணி வழங்கியிருக்கலாம்.

இவ்வாறு மாநகராட்சி கண்காணிப்பின்றி மலேரியா பணி மேற்கொள்ளும் நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் பலர் தேவையற்ற பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாநகராட்சி சுகாதாரத்துறையில் சுகாதார அதிகாரிகள் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு வரம்புக்குள் வராததால் அவர்களை கண்காணிப்பதில்லை என மாநகராட்சி நிலைக்குழு (சுகாதாரம்) தலைவர் சாந்தகுமாரி, மன்றக் கூட்டத்திலேயே புகார் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. திடக்கழிவு மேலாண்மைத்துறை உள்ளிட்ட பிற துறைகளிலும் இதேபோன்ற நிலை இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக புதிய பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. தேவையான பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் என்யூஎல்எம் மூலமாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு சென்னை மாநகராட்சியில் சுகாதாரத் துறையில் 2 ஆயிரத்து 837 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக பூச்சியியல் துறையில் மலேரியா பணியாளர்களாக மட்டும் 2,382 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு மட்டும் ஆண்டுக்கு சுமார் ரூ.60 கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது. ஆனால் இவர்களின் பணியை கண்காணிக்கவில்லை என்பதற்கு கேப்டன் காட்டன் கால்வாய் பணியாளரே சான்று என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், என்யூஎல்எம் மூலம் தண்டையார்பேட்டை மண்டலத்தில் 947 பேர், திரு.வி.க.நகர் மண்டலத்தில் 1093 பேர், அம்பத்தூர் மண்டலத்தில் 1452 பேர் என மொத்தம் 4 ஆயிரத்து 460 பேர் தூய்மைப்பணி மற்றும் அலுவலகப் பணி உள்ளிட்டவற்றுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பணிக்கு இந்த ஆண்டு ஜனவரியில் நாளொன்றுக்கு ரூ.423 ஊதியம் கொடுக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவால் தற்போது ரூ.687 ஆக உயர்ந்துள்ளது. இதனால் இப்பணிக்கு வர பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதுபோன்று பணியில் சேர்ந்த பலர் கவுன்சிலர் ஆள் எனக் கூறிக்கொண்டு, கையெழுத்திட்டுவிட்டு சென்றுவிடுவதாகவும், பணிக்கு வருவதில்லை எனவும் புகார் கூறப்படுகிறது. இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகளின் கணிக்காணிப்பு இல்லாததால், மாநகராட்சி நிதி வீணாகிறது. இது தொடர்பாக மாநகராட்சியில் உள்ள பல்வேறு நிலை அதிகாரிகளிடம் கேட்டபோது, ஒருவர் கூட பதில் அளிக்க முன்வரவில்லை.

SCROLL FOR NEXT