திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை, மருங்காபுரி வட்டங்களை வளப்படுத்த காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் உள்ளதாகவும், இத்திட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் மாவட்டத்துக்குட்பட்ட பொன்னணியாறு அணையில் இருந்து முகவனூர் கிராமத்தில் உள்ள 1,957 ஏக்கர் விளைநிலங்களும், செக்கணம் மற்றும் பழையக்கோட்டை கிராமங்களில் உள்ள 144 ஏக்கர் விளைநிலங்களும், திருச்சி மாவட்டம் கண்ணூத்து அணையில் இருந்து 734 ஏக்கர் விளைநிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. ஆனால், இரு அணைகளும் பல ஆண்டுகளாக போதிய நீர்வரத்து இல்லாமல் பாசனத்துக்கு திறக்கப்படாமல் உள்ளன.
இதனால், இவ்விரு அணைகளில் இருந்து பாசன வசதி பெறும் பெரும்பாலான விவசாய நிலங்கள் வானம் பார்த்த பூமியாக தான் உள்ளன. மழை பெய்வதை வைத்து தான் விவசாயிகள் காய்கறிகள், மலர் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் பருவமழை பொய்க்கும்போது நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து குடிநீருக்குக் கூட தட்டுப்பாடு ஏற்படும் நிலை தான் தொடர்ந்து நிலவுகிறது.
எனவே, காவிரியில் அதிகளவில் தண்ணீர் செல்லும் காலங்களில் உபரி நீரை, மாயனூர் கதவணையிலிருந்து பொன்னணியாறு மற்றும் கண்ணூத்து அணைகளுக்கு வாய்க்கால் மூலமாகவோ அல்லது நீரேற்றுத் திட்டத்தின் மூலம் குழாய் வழியாகவோ கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
5 ஆயிரம் ஏக்கர் பாசனம்: இதுகுறித்து பசுமை புரட்சி பாசன விவசாய சங்கத்தின் நிறுவனத் தலைவர் கே.சி.பழனிச்சாமி ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: பொன்னணியாறு அணைக்கு கடந்த 18 ஆண்டுகளாக போதிய நீர்வரத்து இல்லாமல் உள்ளது. 51 அடி ஆழம் கொண்ட இந்த அணையில் ஏறத்தாழ 17 அடி வரை தூர்ந்து விட்டதால் போதிய அளவு நீரை தேக்க முடியாததால், அணையிலிருந்து நீர் திறப்பும் உரிய நேரத்தில் செய்யப்படுவதில்லை.
இதனால் இந்த அணையின் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். இந்த வட்டங்களில் தற்போது மழையை நம்பியும், கிணற்றுப் பாசனம் மூலமும் காய்கறிகள், மலர்கள் உள்ளிட்டவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது நூற்றுக்கணக்கான டிஎம்சி தண்ணீர் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் வழியாக கடலில் சென்று கலக்கிறது. எனவே, இதுபோன்று காவிரியில் உபரியாக நீர் வரும் காலங்களில் மாயனூர் கதவணை அருகில் நீரேற்று நிலையத்தை அமைத்து அதன் மூலம் காவிரி தண்ணீரை எடுத்து, குழாய் வழியாகவோ அல்லது கால்வாய் வழியாகவோ பொன்னணியாறு மற்றும் கண்ணூத்து அணைகளுக்கு கொண்டு செல்லலாம்.
இதனால் மணப்பாறை மற்றும் மருங்காபுரி வட்டங்களில் உள்ள ஏறத்தாழ 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும். இதன் மூலம் இப்பகுதி விவசாயிகளும், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தால் பொதுமக்களும் பயன்பெறுவர். இதன் மூலம் இந்த பகுதிகள் வளமடையும். இதற்கான நடவடிக்கைகளை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பது தான் இப்பகுதி விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு என்றார்.
ஆய்வுப்பணி மேற்கொள்ளவில்லை: இதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள கடந்த ஆட்சியில் ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்தப் பணி மேற்கொள்ளப்படவில்லை. வறட்சியான பகுதிகளான மணப்பாறை மற்றும் மருங்காபுரி வட்டங்களில் காவிரியில் உபரியாக வரும் தண்ணீரை கொண்டு செல்லும் திட்டம் வந்தால், இந்த பகுதிகள் செழிப்படையும், விவசாயிகளும் பயன்பெறுவர், மக்களின் வாழ்வாதாரமும் உயரும். இதுதொடர்பாக தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து வருகிறோம் என்றார்.
அதிக செலவு ஏற்படும்: இதுகுறித்து நீர்வளத் துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, அவர்கள் கூறியது: காவிரியில் பல ஆண்டுகளாக தண்ணீர் பற்றாக்குறையாக தான் வருகிறது. மேலும், மாயனூரை விட பொன்னணியாறு அணை உயரத்தில்(500 அடி) உள்ளது. இதனால் வாய்க்கால் மூலமாக உபரி நீரை கொண்டு செல்ல வழியில்லை. நீரேற்று பாசனம் மூலமாக தான் கொண்டு செல்ல முடியும்.
இந்த திட்டத்தை செயல்படுத்த பலகோடி ரூபாய் செலவாகும். காவிரியில் உபரி நீர் வந்தால் தான் இந்த திட்டம் பயனளிக்கும். அப்படியே இத்திட்டத்தை செயல்படுத்தினாலும், மின்சாரம், இயக்குதல் மற்றும் பராமரித்தல் உள்ளிட்டவற்றுக்கு அதிக அளவில் தொடர் செலவினத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் தான் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் அரசு தயக்கம் காட்டி வருகிறது என்றனர்.