தேன்கனிக்கோட்டை அருகே இஸ்லாம்பூர் பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையின் படம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. 
சுற்றுச்சூழல்

தேன்கனிக்கோட்டை அருகே தனியார் விடுதி பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தை - வனத்துறை கண்காணிப்பு

செய்திப்பிரிவு

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே தனியார் விடுதி பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையை பிடிக்க, வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இஸ்லாம்பூரில் தனியார் சொகுசு விடுதி 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று, விடுதிக்குள் நுழைந்தது.

அங்கிருந்த நாயை கடித்தது. இதனை அறிந்த விடுதி ஊழியர்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். நிகழ்விடத்துக்கு வந்த வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் குறித்து ஆய்வு நடத்தினர். சிறுத்தையின் நட மாட்டத்தை உறுதி செய்த வனத்துறையினர், அதனை கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்தனர்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி கூறியதாவது: சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க, தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு, வனச்சரக அலுவலர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட வனப்பணியாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

கிராம மக்களிடம் சிறுத்தை நடமாட்டம் குறித்து கேட்டறிந்த மாவட்ட
வன அலுவலர் கார்த்திகேயினி.

மேலும், வன கால்நடை உதவி மருத்துவர் பிரகாஷ் கொண்ட மருத்துக்குழுவினரும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தையின் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, தேன்கனிக்கோட்டை காப்புக்காட்டில் இருந்து சுமார் 7 கிமீ சுற்றியுள்ள சாமிபுரம், அடவிசாமிபுரம், அடைகலபுரம, தண்டரை, இஸ்லாம்பூர், பன்டேஸ்வரம், பேலூர், எண்ணேஸ்வரம், பெண்ணங்கூர் உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள், தொழிற்சாலைகள், குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாக இருக்கும்படி வனப்பணியாளர்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை வீட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும், வீட்டிற்கு வெளியே மின்விளக்குகள் ஒளிரச் செய்ய வேண்டும். சிறுத்தையின் நடமாட்டம் தென்படும்பட்சத்தில் வனஅலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், என்றார்.

SCROLL FOR NEXT