அஞ்செட்டியை அடுத்த நாட்டறாம்பாளையத்தில் உள்ள விளைநிலத்தில் கேழ்வரகு பயிரில் ஊடுபயிராகச் சாகுபடி செய்துள்ள கடுகு செடி நன்கு வளர்ந்து, பூக்கள் பூத்துள்ளது. 
சுற்றுச்சூழல்

பருவநிலை மாற்றத்தை சமாளிக்க அஞ்செட்டி மலைக் கிராமங்களில் கேழ்வரகில் ஊடுபயிராக கடுகு சாகுபடி!

கி.ஜெயகாந்தன்

ஓசூர்: மாறி வரும் பருவநிலையை சமாளிக்க அஞ்செட்டி சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகள் கேழ்வரகு பயிரில் ஊடுபயிராகக் கடுகு சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் வருவாய் இழப்பு தடுக்கப்படுவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியைச் சுற்றியுள்ள மலைக் கிராமங்களில் வானம் பார்த்த பூமியில் மானாவாரி பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இப்பகுதியில் கேழ்வரகு, நிலக்கடலை, எள் உள்ளிட்ட பயிர்கள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும், இப்பகுதியில் சாகுபடி செய்யும் சிறுதானிய பயிர் சாகுபடியில் ஊடு பயிராகத் துவரை, அவரை, கடுகு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

குறிப்பாக, கடுகு சாகுபடியில் நல்ல வருவாய் கிடைப்பதால், அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, கோட்டையூர், உரிகம் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் கேழ்வரகு பயிரில் ஊடுபயிராக கடுகு சாகுபடி செய்துள்ளனர்.

இதுதொடர்பாக விவசாயி கிருஷ்ணப்பா கூறியதாவது: மழையை நம்பியே சாகுபடி செய்யும் சிறுதானிய பயிர்களின் ஊடுபயிராக துவரை, அவரை, கடுகு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்கிறோம். இதில், கடுகு 3 மாதங்களில் அறுவடை கிடைப்பதால், சிறுதானியம் அறுவடைக்கு முன்னரே கடுகு அறுவடை செய்து விடுகிறோம்.

கடந்தாண்டு போதிய மழை இல்லாததால் கடுகில் நோய் தாக்கம் மற்றும் விளைச்சல் குறைவாக இருந்தது. நிகழாண்டில் ஓரளவுக்கு மழை பெய்துள்ளதால், கேழ்வரகு மகசூல் பாதிக்கப்பட்டாலும், ஊடுபயிரான கடுகு நல்ல மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இதனால், வருவாய் இழப்பு தடுக்கப்பட்டு, சீரான வரு வாய்க்கு இந்த சாகுபடி முறை கைகொடுத்து வருகிறது.

மேலும், இப்பகுதியில் விளையும் கடுகு நல்ல தரமாகவும், மணமாகவும் உள்ளதால், கர்நாடக மாநில வியாபாரிகள் நேரடி யாக இங்கு வந்து கொள்முதல் செய்கின்றனர். இதனால், எங்களைத் தேடி சந்தை வாய்ப்பும் கிடைக்கிறது.

கடுகு சாகுபடி தொடர்பாக வேளாண் துறையினர் உரிய வழிகாட்டு தல் மற்றும் ஆலோசனை கள் வழங்கினால் விவசாயிகளுக்குப் பயன் உள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT