வீடுகளின் மொட்டை மாடியில் பெய்யும் மழைநீர் பைப் மூலம் கிணற்றுக்கு கொண்டு செல்லப்படுகிறது . 
சுற்றுச்சூழல்

மழைநீர் சேகரிப்பு பணியில் பசுமை மன்றம்: நிலத்தடி நீர்மட்டம் உயர்வால் சிவகாசி மக்கள் மகிழ்ச்சி

அ.கோபால கிருஷ்ணன்

சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் குடியிருப்புகளுக்கு அருகே பயன்பாடின்றி உள்ள மாநகராட்சி கிணறுகளை பசுமை மன்றம் சீரமைத்து, வீடுகளின் மாடிகளில் பெய்யும் மழைநீரைச் சேகரித்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

சிவகாசி தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிவகாசி பசுமை மன்றம் என்ற அமைப்பை உருவாக்கினர். இந்த அமைப்பு சார்பில் குளம், கண்மாய், ஊருணி ஆகியவற்றை சீரமைத்து, வரத்துக் கால்வாய்களை தூர்வாருகின்றனர். கண்மாய், குளங்கள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்கின்றனர்.

சிவகாசியில் ஐயர் குளம், வண்ணார் குளம், ஆணையூர் கண்மாய், செங்குளம், பெரியகுளம், சின்னகுளம், மணிக்கட்டி ஊருணி, விளாம்பட்டி சாலையில் உள்ள ஊருணி, பன்னீர் தெப்பம் ஆகியவற்றைச் சீரமைத்து, வரத்துக் கால்வாய்களை தூர்வாரி மழைநீர் சேகரிப்பு வசதியை ஏற்படுத்தியதால் இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

வீடுகளின் மொட்டை மாடியில் பெய்யும் மழைநீர் பைப் மூலம்
கிணற்றுக்கு கொண்டு செல்லப்படுகிறது

அதைத் தொடர்ந்து சிவகாசி, திருத்தங்கல்லில் குடியிருப்புகளுக்கு அருகே பல ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி சேதமடைந்து உள்ள கிணறுகளைக் கண்டறிந்து அவற்றைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிணற்றை சுற்றி உள்ள குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்களில் மாடியில் பெய்யும் மழைநீரை குழாய்கள் மூலம் கொண்டு வந்து கிணற்றில் சேகரிக்கின்றனர்.

இதைக் கண்காணித்து பராமரிக்க அப்பகுதியை சேர்ந்தவர்களை பொறுப்பாளர்களாக நியமித்துள்ளனர். மாநகராட்சிப் பகுதியில் உள்ள 32 கிணறுகளில் முதல் கட்டமாக 12 கிணறுகளைச் சீரமைத்து மழைநீர் சேகரிப்பு மையங்களாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட்டில் உள்ள கிணறுகளைச் சீரமைத்து சுமார் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலான கட்டிடங்களின் மாடியில் பெய்யும் மழைநீரைச் சேகரிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடுகளின் மாடியில் பெய்யும் மழைநீரை கிணறுகளில் சேமிப்பதால், அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள வீடுகளின் ஆழ்துளைக் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் பசுமை மன்றத்தின் சேவையைப் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

SCROLL FOR NEXT