சுற்றுச்சூழல்

பசுமை பரப்பை அதிகரிக்க கைகோத்த மாணவர்கள்: கோவையில் ஒரு லட்சம் விதைப்பந்துகள் தயாரிக்கும் பணி தொடக்கம்

இல.ராஜகோபால்

கோவை: காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால் உலகளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அனைத்து நாடுகளும் அதிக அக்கறையுடன் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் பசுமை நிலப்பரப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இதை கருத்தில் கொண்டு இளைய சமுதாயத்தினர் ஒன்றிணைந்து இரண்டு நாட்களில் ஒரு லட்சம் விதைப்பந்துகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, ஒரு லட்சம் விதைப்பந்துகளை 500 மாணவ, மாணவிகள் இணைந்து தயாரிக்கும் நிகழ்ச்சி கோவை அரசு கலை கல்லூரியில் நேற்று தொடங்கியது. இந்த முயற்சி குறித்து அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கனகராஜ் கூறியதாவது: பூமியின் எதிர்காலத்துக்கு வனங்கள் முக்கியம். ஒரு நாட்டில் 33 சதவீதம் வனப்பரப்பு இருக்க வேண்டும். நம் நாட்டில் சற்று குறைவாக உள்ளது. தமிழகத்தில், கோவை மாவட்டத்தில் ஓரளவுக்கு காடுகள் உள்ளன. காடுகள்தான் பூமித்தாயின் நுரையீரல். எதிர்கால தலைமுறையினருக்கு சிறப்பாக வாழ அதற்கு ஏற்ப சூழலை ஏற்படுத்தி தர வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

காடுகள் என்பது பொன்முட்டையிடும் வாத்து போன்றவை. அவற்றை சரியாக பயன்படுத்தினால் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம். இல்லையெனில் மனிதர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். அண்ணல் காந்தியடிகள் கூறியது போல இயற்கையை ஓர் உயிரினமாக பார்க்க வேண்டும். மனிதர்கள் இயற்கையாக வாழ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு பசுமை நிலப்பரப்பை அதிகரிக்க
உதவும் வகையில் கோவை அரசு கல்லூரியில் ஒரு லட்சம் விதைப்பந்துகளை
தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் .

மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமை வகித்து விதைப்பந்துகள் தயாரிப்பு பணியை தொடங்கி வைத்து பேசியதாவது: ஆண்டுதோறும் செப்டம்பர் 27-ம் தேதி உலக சுற்றுலா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றுலாவை மேம்படுத்தவும், அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டுக்கான கருப்பொருள் ‘சுற்றுலா மற்றும் பசுமை முதலீடு’ என்பதாகும்.

தொழில்துறை, மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாக்களை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். நீடித்த நிலையான வளர்ச்சிக்கு சுற்றுலாத்துறையின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

கோவை மாவட்டத்தில் இயற்கை எழில்மிகு இடங்கள், கோயில்கள், அருங்காட்சியகம், அருவிகள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. பசுமையான பகுதிகள் அதிகம் உள்ள போதும் வனம் மற்றும் மரங்களின் பரப்பை 33 சதவீதமாக அடைவதற்கான இடைவெளியை குறைத்திட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக அரசு கலை அறிவியல் கல்லூரியை சேர்ந்த 500 மாணவ, மாணவிகள் இரண்டு நாட்களில் ஒரு லட்சம் விதைப் பந்துகளை தயாரிக்க உள்ளனர். இந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது.

இந்த விதைகளில் 40 முதல் 50 சதவீதம் வரை மரங்களாக வளர வாய்ப்புகள் உள்ளன. நம்முடைய வாழ்நாளை விட மரங்களின் வாழ்நாட்கள் அதிகம். இன்று உருவாக்கப்படும் ஒவ்வொரு விதையிலிருந்தும் உருவாகும் மரங்கள் 100 ஆண்டுகள் வாழும். சுற்றுலாத்துறை என்பது பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது மட்டுமின்றி அதிக வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறது.

இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. அதுதான் நம்முடைய பலம். ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு சிறப்புகளை கொண்ட இடங்கள் உள்ளன. ஒரு சில மாநிலங்களில் வேளாண்மை சிறப்பாக இருக்கும். ஒரு சில பகுதிகளில் நீர் பாதுகாப்பு சிறப்பாக இருக்கும். இதுபோன்ற இடங்களுக்கு சுற்றுலா செல்லும்போது நாம் பலவற்றை கற்றுக்கொள்ள முடியும்.

எங்கு சென்றாலும் அந்த பகுதியை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அங்குள்ள சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பங்களிக்க வேண்டும். சட்ட திட்டங்கள், கலாச்சாரம், பண்பாட்டை அறிந்துகொண்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக ஒவ்வோர் இடங்களிலும் என்ன உணவு பழக்க வழக்கங்கள் உள்ளன என்பதை கற்றுக்கொள்ளும்போது அந்த சுற்றுலா பயணத்தின் நினைவுகள் உங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும். இவ்வாறு ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.

நிகழ்வில், கல்லூரி சுற்றுலாத்துறை தலைவர் சங்கீதா, மாவட்ட சுற்றுலா அலுவலர் னிவாசன், ‘ஸ்கால் இன்டர்நேஷனல்’ கோவை தலைவர் அருண்குமார், தென்னிந்திய ஓட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் சங்க இயக்குநர் சுந்தர் சிங்காரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT