உதகை: நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் சமீபத்தில் தொடர்ந்து நிகழ்ந்த புலிகள் உயிரிழப்பு குறித்து, உதகையில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.
புலிகள் அதிகம் வாழும் பகுதிகளில், உலக அளவில் முதல் இடத்தில் இருக்கிறது நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம். கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்ட தேசிய விலங்கான புலியின் எண்ணிக்கை, மெல்ல அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், புலிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் முதல் விஷம் வைத்து கொல்லப்பட்டது வரை, கடந்த ஆகஸ்ட் மற்றும் நடப்பு செப்டம்பர் மாதத்தில் நீலகிரி மாவட்டத்தில் அடுத்தடுத்து 10 புலிகள் உயிரிழந்திருக்கின்றன. இதில், நீலகிரி வனக் கோட்டத்தில் மட்டும் 7 புலிகள் இறந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
குறுகிய நாட்களில் அதிக எண்ணிக்கையில் புலிகள் உயிரிழந்த விவகாரம், தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. புலிகளின் இறப்புக்கான காரணங்களை அறிய, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையக் குழுவினர், உதகையில் விசாரணையை தொடங்கியிருக்கின்றனர். தேசிய புலிகள் ஆணைய குற்ற பிரிவு ஐஜி முரளிகுமார்,
மத்திய வன விலங்கு குற்றத் தடுப்பு பிரிவு தென் மண்டல இயக்குநர் கிருபா சங்கர், மத்திய வன விலங்கு ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இக்குழுவினர், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர், வெளி மண்டல துணை கள இயக்குநர்கள், நீலகிரி வனக்கோட்ட அலுவலர் ஆகியோரிடம் விசாரித்தனர்.
6 குட்டிகள் உட்பட 10 புலிகள் உயிரிழந்தது எப்படி? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டறிந்தனர். இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, "டெல்லியிலுள்ள தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் உத்தரவின் பேரில், பெங்களூரு என்.டி.சி.ஏ. குற்றப் பிரிவு ஐ.ஜி தலைமையில் வன விலங்கு குற்றத் தடுப்புப் பிரிவு தென்மண்டல இயக்குநர், வனவிலங்கு ஆராய்ச்சி மைய மூத்த ஆய்வாளர்கள் அடங்கிய நான்கு பேர் கொண்ட குழுவினர் நீலகிரி மாவட்டத்துக்கு வந்திருக்கின்றனர்.
உதகை கால் ஃப்லிங்க் சாலையிலுள்ள வென்லாக் வன இல்லத்தில், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர், துணை இயக்குநர், நீலகிரி கோட்ட வன அலுவலர், உதவி வனப் பாதுகாவலர் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம், புலிகள் இறப்புக்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தாயைப் பிரிந்த நிலையில் பட்டினியால் நான்கு புலி குட்டிகள் உயிரிழந்த சின்ன குன்னூர், எமரால்டு பகுதிகளிலும், இரண்டு புலிகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் பகுதிகளிலும் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், நடுவட்டம், சீகூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றனர்.
விசாரணை அறிக்கையை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திடம் அளிக்க இருக்கின்றனர். அதை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றனர்.