உதகை: நீலகிரி மாவட்டத்தில் புலிகள் உயிரிழப்பு குறித்து, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் 60 சதவீதம் காடுகள் உள்ளன. வன விலங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக புலிகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி சீகூரில் பட்டினியால் இரண்டு புலி குட்டிகள் இறந்தன. 17-ம் தேதி நடுவட்டத்தில் ஒன்றும், 31-ம் தேதி முதுமலையில் ஒன்றும் உயிரிழந்தன.
கடந்த 9-ம் தேதி அவலாஞ்சி பகுதியில் இரண்டு புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டன. செப்டம்பர் 19-ம் தேதி சின்னக்குன்னூர் பகுதியில் 4 புலி குட்டிகள் பட்டினியால் இறந்தன. அதன் தாயை காணாததால், வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இரண்டு மாதங்களில் 11 புலிகள் உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நீலகிரி மாவட்ட வனப் பகுதியில் உயிரிழந்த புலிகள் குறித்து விசாரணை நடத்த தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரி ஐ.ஜி. முரளி தலைமையில் இரண்டு பேர் இன்று முதுமலை வருகின்றனர். இரண்டு தினங்கள் தங்கும் அதிகாரிகள், எங்கெங்கு புலிகள் இறந்தன. புலிகள் உயிரிழப்புக்கான காரணம் ஆகியவற்றை கண்டறியவுள்ளனர்.
மேலும், வனத்துறை அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொண்டு தேசிய புலிகள் காப்பக ஆணையத்திடம் அறிக்கை அளிக்க உள்ளனர்.