கோப்புப் படம் 
சுற்றுச்சூழல்

சூரியகாந்தி சாகுபடியில் ஆர்வம் காட்டும் ஏக்கல்நத்தம் மலைக்கிராம மக்கள்

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: ஏக்கல்நத்தம் மலைக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் சூரியகாந்தி சாகுபடியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை அருகே நாரலப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மலைக்கிராமம் ஏக்கல்நத்தம். விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு வசிக்கும் மக்கள். ராகி, சாமை, நெல், தக்காளி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இதே போல் எண்ணெய் வித்து பயிர்களான நிலக்கடலை, எள், சூரியகாந்தி உள்ளிட்டவைகளை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். பெரும்பாலும், தங்களது வீட்டுத் தேவைக்காக காய்கறிகளை விளைவிக்கின்றனர். குறிப்பாக ஏக்கல்நத்தம் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை தாங்களே விளைவிக்கின்றனர். இந்நிலையில் தற்போது சூரியகாந்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கிளிகளுக்கு பிடித்த உணவு: இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, சூரியகாந்தி சாகுபடியை பொறுத்தவரை ஆடிப் பட்டம், கார்த்திகை பட்டம் ஆகிய இரு பட்டங்களில் மானாவாரியில் சாகுபடி செய்யலாம். இதுதவிர இறவை பாசனத்தில் மார்கழி பட்டம் மற்றும் சித்திரை பட்டங்களில் சாகுபடி மேற்கொள்ளலாம். சூரியகாந்தியைப் பொறுத்தவரை 80 முதல் 90 நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும். ஆனால் மணிகள் முற்றும் தருணத்தில் கிளிகளிடமிருந்து பாதுகாப்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது. கிளிகளுக்கு மிகவும் பிடித்த உணவாக சூரியகாந்தி விதைகள் உள்ளன. எனவே காலை மற்றும் மாலை வேளைகளில் கூட்டம் கூட்டமாக கிளிகள் படையெடுக்கும். அவற்றை ஓசையெழுப்பி விரட்டுவோம்.

பூக்களைக் காய வைப்பது கடினம்: மழைக்காலத்தில் அறுவடை மேற்கொள்வது மற்றும் பூக்களைக் காய வைப்பது கடினமான பணியாகும்.

மேலும், ஈரப்பதம் அதிகமாக இருந்தால் விதைகளில் பூஞ்சாணம் உற்பத்தியாகி இழப்பை ஏற்படுத்தி விடும். இதனால் பூக்கள் நன்கு உலர்ந்த பிறகு விதைகளைப் பிரித்தெடுத்து அவற்றை நன்கு உலர்த்தி, சுத்தம் செய்து அதன் பிறகு எண்ணெய் எடுத்து, வீட்டுத் தேவைக்கு பயன்படுத்துகிறோம். மேலும், சுற்றுவட்டாரக் கிராமங்களில் வசிப்பவர்களும் எங்களிடம் சூரியகாந்தி விதைகள், எண்ணெய் வாங்கிச் செல்வர், என்றனர்.

SCROLL FOR NEXT