உதகை: நீலகிரி மாவட்டத்தில் கோரக்குந்தா, குந்தா, நடுவட்டம் உட்பட்ட ஆறு வனச்சரகங்களில் ஆண்டுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் டி.வெங்கடேஷ் தெரிவித்தார்.
இது தொடர்பாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் டி.வெங்கடேஷ் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் 4 புலிகளும், 6 புலிக் குட்டிகள் உயிரிழந்துள்ளன. இதில், வேட்டையாடப் பட்ட மாட்டின் சடலத்தில் விஷம் வைத்து, இரு புலிகளை கொலை செய்ததாக சேகர் என்பவரை கைது செய்துள்ளோம்.
கடந்த பிப்ரவரி மாதம் பவேரியா கொள்ளை கும்பலால் குந்தா வனப் பகுதியில் ஒரு புலி வேட்டையாடப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளோம். பொதுவாக 4 ஆண்டுக்கு ஒரு முறை மாவட்ட வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு நடப்பது வழக்கம். இனி வரும் காலங்களில் கோரக்குந்தா, குந்தா, நடுவட்டம் உட்பட்ட ஆறு வனச்சரகங்களில் ஆண்டுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக வனத்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. முக்கியமான இடங்களில் கண்காணிப்புக் கோபுரம் அமைத்து வேட்டை தடுப்புக் காவலர்கள் கண்காணிப்புப் பணியில்ஈடுபடுவர். நாட்டில் புலிகள் அதிகம் உள்ள மூன்றாவது பகுதியாக முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. வட இந்தியாவில் 600, 700 சதுர கி.மீட்டரில்தான் ஒரு புலி இருக்கும்.
ஆனால், சத்தியமங்கலம், முதுமலை வனப் பகுதியில் 30 சதுரகி.மீட்டருக்கு ஒரு புலி வசிப்பது தெரிய வந்துள்ளது. புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவற்றின் பாதுகாப்பையும் உறுதிப் படுத்த வேண்டும். வனத் துறையில் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும், என்றார்.