உதகை: உதகை அரசு கலைக் கல்லூரி வனவிலங்கு உயிரியல் துறை மாணவர் ஏ.சாம்சன், வெண்முதுகு பாறு கழுகுகள் வாழ்வியல் ஆய்வில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உதகை அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி போன்ற மாவட்டங்களை சேர்ந்த 4,500 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 200-க்கும் அதிகமான பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தக் கல்லூரிக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் வனவிலங்கு உயிரியல் துறையின் உதவிப் பேராசிரியர் பி.ராமகிருஷ்ணனின் வழிகாட்டுதலில், முனைவர் பட்டத்துக்கான ஆய்வறிக்கை சமர்ப்பித்த மாணவர் ஏ.சாம்சன் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
இவர், மாயாறு பள்ளத்தாக்கு மற்றும் சீகூர் பீடபூமியில் காணப்படும் ‘ஒயிட் ரம்ப்ட் வல்ச்சர்’ எனப்படும் வெண்முதுகு பாறு கழுகுகளின் எண்ணிக்கை, இனப்பெருக்கம், சூழலியல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் பற்றிய ஆய்வுகள் என்ற தலைப்பில் ஆய்வறிக்கை சமர்ப்பித்தார்.
இதுதொடர்பாக வனவிலங்கு உயிரியல் துறை உதவிப் பேராசிரியர் பி.ராமகிருஷ்ணன் கூறியதாவது: மாணவர் சாம்சனின் விடா முயற்சியை பாராட்டியே ஆக வேண்டும். வெண்முதுகு பாறு கழுகுகளின் எண்ணிக்கை, அதன் பழக்கம் மற்றும் வாழ்விடங்கள், கூடுகட்டும் இடங்களைத் தேர்ந்தெடுப்பது, இனப்பெருக்கம் செய்யும் பழக்கம் மற்றும் நடத்தை, சுற்றுப்புறங்களுக்கு தகவமைத்தல், தண்ணீரை பயன்படுத்துதல், ஆபத்தின்போது அது எவ்வாறு தன்னைக் காத்துக் கொள்கிறது என்பதை அவர் ஆய்வு செய்தார்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வெண்முதுகு பாறு கழுகுகள் கலைக்களஞ்சியமாக மாறியுள்ளன. சாம்சனின் ஆராய்ச்சிகள், அழிந்து வரும் பாறு கழுகுகள் இனத்தைப் பாதுகாப்பதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். மாணவரின் ஆய்வுக்கு மாநில வனத்துறை அளித்த ஆதரவுக்காக அரசு கலைக் கல்லூரி நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
ஆய்வறிக்கைக்காக தங்கப் பதக்கம் வென்றது இதுவே முதல்முறையாகும். விலங்கியல் மற்றும் வனவிலங்கு உயிரியல் துறை புதிய பூச்சிகள் கண்டுபிடிப்பு, டிஎன்ஏ ஆய்வுகள், இயற்கை ஆய்வுகள், யானை இறப்பு பகுப்பாய்வு, கழுகுகள், விலங்கின ஆய்வுகள் போன்ற பல்வேறு அம்சங்களில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை உதகை அரசுக்கல்லூரி மேற்கொண்டு வருகிறது. இந்த தங்கப் பதக்கம் வன உயிரியல் துறைக்கும், கல்லூரிக்கும் மற்றொரு மைல்கல், என்றார்.