சுற்றுச்சூழல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹெலிகாப்டர் மூலம் 4 லட்சம் விதைப்பந்துகள் தூவும் பணி தொடக்கம்

கி.தனபாலன்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 லட்சம் நாட்டு வகை மர விதைப்பந்துகள் ஹெலிகாப்டர் மூலம் தூவும் பணியை தமிழக மற்றும் புதுச்சேரி பிராந்திய கடற்படை அதிகாரி ரவிக்குமார் டிங்க்ரா தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாதா அமிர்தானந்தமயி மடத்தின் சார்பில் இந்திய கடற்படை மற்றும் வனத்துறையுடன் இணைந்து, அடர்த்தி குறைந்த காடுகளை பசுமையாக்கும் முயற்சியாக இம்மாவட்டத்தினை பூர்வீகமாக கொண்ட நாட்டு இன மரங்களான புளி, நாவல், வேம்பு, புங்கன் போன்ற விதைப்பந்துகள் ராமேசுவரம் தீவுப்பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் தூவும் பணிகள் நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க விழா இன்று உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமான தளத்தில் நடைபெற்றது.

மாதா அமிர்தானந்தமயி மடத்தின் பொருளாளர் சுவாமி ராமகிருஷ்ணநந்தா புரி, விதைப்பந்துகளை, தமிழகம் மற்றும் புதுச்சேரி பிராந்திய இந்திய கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் ரவிக்குமார் டிங்க்ராவிடம் ஒப்படைத்தார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் விதைப்பந்துகளை தூவும் பணியை கடற்படை அதிகாரி ரவிக்குமார் டிங்க்ரா தொடங்கி வைத்தார்.

மாதா அமிர்தானந்தமயி மடத்தின் பொருளாளர் சுவாமி ராமகிருஷ்ணநந்தா புரி பேசும்போது, “உலகில் ஆண்டுதோறும் 10 லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிந்து வருகின்றன. இதனால் உலகில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். அழிந்து வரும் நிலையில் மீதி இருக்கும் சுற்றுச்சூழல் அமைப்பை பாதுகாக்கவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் பூமியில் மரங்களை நட வேண்டும். அதற்காக மாதா அமிர்தானந்தமயி மடம் ஜி 20 மாநாட்டை முன்னிட்டு சி20 என்ற குழுவுடன் இணைந்து, நாட்டிலுள்ள உள்ள 12 மாநிலங்கள் மற்றும் உலகளவில் 1.3 மில்லியன் விதைப்பந்துகளை தூவ திட்டமிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 லட்சம் விதைபந்துகள் தூவப்பட உள்ளன. இதில் வறட்சி மாவட்டமான ராமநாதபுரத்தில் ஹெலிகாப்டர் மூலம் 4 லட்சம் விதைப்பந்துகள் மழைக்காலத்தில் தூவப்படும். இதற்காக விதைப்பந்துகள் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்படும். அடர்த்தி குறைந்த காடுகளை கண்டறிந்து அதற்கான வரைபடத்தை இந்திய கடற்டையிடம், வனத்துறை வழங்கியுள்ளது. இதற்காக இந்திய கடற்படைக்கும், தமிழக வனத்துறைக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என பேசினார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி பிராந்திய இந்திய கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் ரவிக்குமார் டிங்க்ரா பேசும்போது, “காடுகளை பசுமையாக்கும் பணியில் இந்திய கடற்படையும் இணைந்துள்ளது சிறப்பான பணி. இந்திய கடற்படை முதல் முறையாக வானிலிருந்து விதைப்பந்துகளை தூவும் பணியில் ஈடுபடுகிறது.

ஹெலிகாப்டர் மூலம் 4 லட்சம் விதைப்பந்துகள் மழைக்காலங்களில் தூவப்பட உள்ளது. ஐஎன்எஸ் பருந்தில் உள்ள ஹெலிகாப்டர்கள் இன்னும் இரு வாரங்கள் இப்பணியில் ஈடுபடும். காடுகளில் விதைப்பந்துகளை தூவி மரங்கள் வளர்வதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். சமுதாயத்திற்கு பயனுள்ள இத்திட்டத்தில் இந்திய கடற்படையும் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” எனக்கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமானத்தள கமாண்டிங் அதிகாரி கேப்டன் விக்ரந்த் சப்னிஸ், மாவட்ட வன அலுவலர் எஸ்.ஹேமலதா, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, மாதாத அமிர்தானந்தமயி மடத்தின் நிர்வாகி மாத்ரூ கிருபார்ம சைதன்யா, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பேரன் ஷேக் சலீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT