தென்காசி: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலையத்துக்கு எதிரே உள்ள குடியிருப்புகளில் இருந்துவெளியேறும் கழிவுநீர் திருநெல்வேலி- தென்காசி சாலைக்கு அடியில் குழாய் மூலம் கொண்டுசெல்லப்பட்டு, தொட்டியான் குளத்தில் விடப்படுகிறது. சாலைக்கு கீழே அமைக்கப்பட்ட குழாய் சிறியதாக அமைக்கப்பட்டதால் கழிவுநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கழிவுநீர் தேங்கிக் கிடக்கிறது.
இதுகுறித்து ஆலங்குளம் பேரூராட்சி கவுன்சிலரும் தென்காசி தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளருமான பழனிசங்கர் கூறும்போது, “திருநெல்வேலி- தென்காசி நான்குவழிச் சாலை அமைக்கும் பணியின்போது, கழிவுநீர் செல்வதற்கான குழாயை சரியான முறையில் அமைக்கவில்லை. மேலும், சிறிய அளவிலான குழாய் அமைக்கப்பட்டுள்ளதால் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
சாலைக்கு வடக்கு பகுதியில் உள்ள பள்ளத்தில் கழிவுநீர் தேங்கிக் கிடக்கிறது. பேரூராட்சி பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமல் கழிவுநீரில் இறங்கி, அடைப்பை நீக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், கழிவுநீர் தேங்கிக் கிடக்கும் பகுதியில் குடிநீர் குழாயும் செல்கிறது. இந்த குழாயில் கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
சாலையை உடைத்து, கழிவுநீர் தடையின்றி செல்ல பெரிய அளவிலான குழாய் அமைக்க வேண்டும். அல்லது கால்வாய் கட்ட வேண்டும். கழிவுநீர் தேங்காமல் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். நடவடிக்கை எடுக்கத் தவறினால் பொதுமக்களைத் திரட்டி சாலை மறியல் செய்வோம்” என்றார்