சுற்றுச்சூழல்

கண்முன்னே கருகும் பயிர்கள் - காப்பாற்ற போராடும் ராதாபுரம் விவசாயிகள்!

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டாரத்தில் நிலவும் வறட்சியால் பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி ஊற்றி வருகிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் முழுக்க வறட்சியின் பிடியில் சிக்கியிருக்கிறது. ராதாபுரம் வட்டாரத்தில் வறட்சியின் கோரதாண்டவத்தால் பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் தவியாய் தவிக்கிறார்கள். ராதாபுரம் வட்டாரத்தில் நெல், வாழை, பருத்தி மற்றும் பல வகையான காய்கறி பயிர்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் இப்பகுதியில் தென்னைமரங்களும் அதிகளவில் உள்ளன. கிணற்றுப் பாசனத்திலிருந்து கிடைக்கும் தண்ணீரை கொண்டு தென்னை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ராதாபுரம் வட்டாரத்தில் கடந்த பல மாதங்களாக மழை பொய்த்து விட்டதால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. கிணறுகளில் தண்ணீரில் வற்றி வறண்டு விட்டது.

இதனால் தென்னைகளுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் திண்டாடுகிறார்கள். தங்கள் கண்முன்னே தென்னைகள் கருகுவதை காண சகிக்காமல் பலர் பணம் கொடுத்து தண்ணீரை டேங்கர் லாரிகளில் கொண்டுவந்து தென்னைகளுக்கு ஊற்றி வருகிறார்கள்.

இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: பருவ மழை பொய்த்ததால் கிணற்று பாசனம் கை கொடுக்கவில்லை. ஆழ்துளை கிணறுகள் அமைத்தும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் ராதாபுரம் தாலுகா பகுதிகளில் பயிரிட்ட அனைத்து வகையான பயிர்களும் கருகும் நிலையை எட்டி உள்ளன. தற்போது பயிர்களை காப்பாற்ற போராடி வருகிறோம். தனியார் டேங்கர் லாரி மூலம் விற்பனை செய்யும் தண்ணீரை விலைக்கு வாங்கி பயிர்களுக்கு ஊற்றி காப்பாற்ற முயற்சிக்கிறோம் என தெரிவித்தனர்.

பணகுடி விவசாயி ஸ்ரீதர் கூறும்போது, ‘‘தென்னை, வாழை பயிரிட்டுள்ளேன். தற்போதைய வறட்சியால் தென்னை மரங்களை பாதுகாக்க நீர் ஆதாரம் இல்லாத நிலையில் தேங்காய்கள் உரிய விளைச்சல் பெறவில்லை. தென்னை மரங்களை பாதுகாக்க தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பாய்ச்சி வருகிறேன’’ என்றார்.

பணகுடி வட்டார விவசாய சங்க தலைவர் பிராங்கிளின் கூறும்போது, நெல் பயிர் உட்பட தென்னை மரங்களை காப்பாற்ற நாள்தோறும் ரூ.700 முதல் ரூ 1,400 வரை செலவிட்டு தண்ணீர் பாய்ச்சுகிறோம். விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு, ராதாபுரம் தாலுகாவை வறட்சி பகுதியாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT