கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே பாரூர் பெரிய ஏரியில் உயிரிழந்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போச்சம்பள்ளி வட்டம் பாரூரில் 600 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியில் கட்லா, ரோகு, சப்பாரை, விரால் உள்ளிட்ட பல்வேறு ரக மீன்கள் வளர்க்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், கீழ்குப் பத்திலிருந்து ஆமணக்கப்பட்டி செல்லும் சாலையை ஓட்டியுள்ள ஏரிக்கரைப் பகுதி நீரில் கடந்த சில நாட்களாக மீன்கள் அதிக அளவில் உயிரிழந்து மிதந்து வருகின்றன. இதனால், இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
இது தொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது: ஏரியில் உயிரிழந்து மிதக்கும் மீன்களை, பறவைகள் கொத்திச் சென்று வீடுகளின் மேற்கூரைகள், வீட்டு மாடி, குடிநீர் தொட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீசிச் செல்கின்றன. இதனால், மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகிறோம். எனவே, உயிரிழந்த மீன்களை அப்புறப்படுத்த நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.