இ
துவரை பூச்சிக்கொல்லியைக் குடித்து விவசாயிகள் இறந்தனர் என்ற செய்திகளைத்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது, பூச்சிக்கொல்லியைத் தெளிக்கும்போதே அதை சுவாசித்த காரணத்தால், பெரம்பலூரில் நான்கு விவசாயிகள் இறந்திருக்கின்றனர் என்பது பெரும் அதிர்ச்சி!
பெரம்பலூர் மாவட்டம் சித்தளி கிராமத்தைச் சார்ந்த ராஜா, ஒதியம் கிராமத்தைச் சார்ந்த செல்வம், கூத்தூரைச் சார்ந்த ராமலிங்கம், பசும்பலூரைச் சார்ந்த அர்ச்சுனன் ஆகியோர் பூச்சிக்கொல்லியைத் தெளிக்கும்போது ஏற்பட்ட விஷ பாதிப்பால் மரணமடைந்துள்ளனர். இதே காரணத்தால் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் பூச்சிக்கொல்லி விஷ பாதிப்பால் ஏற்பட்ட மரணங்கள், அதைத் தொடர்ந்து அதே காரணத்தால் தெலங்கானாவில் ஏற்பட்ட மரணங்கள் ஆகியவை குறித்து தேசிய அளவில் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் பெரம்பலூர் மாவட்டத்தில் பூச்சிக்கொல்லி விஷ பாதிப்பால் ஏற்பட்டுள்ள மரணங்கள், பல கேள்விகளை எழுப்புகின்றன.
இப்படியான மரணங்கள் புதிதல்ல. காரணம், ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுக்க 2 லட்சம் பேர் பூச்சிக்கொல்லி விஷ பாதிப்பால் இறப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. விவசாயத்தில் பயன்படுத்தும் விஷத்தன்மையுள்ள வேதிப்பொருட்களால் இந்தியாவில் ஆண்டுக்கு 10 ஆயிரம் விவசாயத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது மிகக் குறைவான மதிப்பீடு. ஏனெனில், இது போன்ற புள்ளிவிவரங்களைச் சேகரித்து ஆய்வு செய்து முறையாக வெளியிடும் வழிமுறைகள் ஏதுமில்லாததே இதற்குக் காரணம்.
பூச்சிக்கொல்லி விஷ பாதிப்பால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் இறப்பதற்கு பூச்சிக்கொல்லி மேலாண்மையில் உள்ள குறைபாடுகளும்அலட்சியப் போக்குமே காரணம் என்று குற்றம்சாட்டுகிறார்கள் வேளாண் செயல்பாட்டாளர்கள்.
பூச்சிக்கொல்லிகளின் தொழில்நுட்பத் தோல்விகளுக்கு விவசாயிகள் பலிகடாவாகின்றனர். பூச்சிகளுடன் தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகளை இந்தத் தொழில்நுட்பங்கள் உருவாக்குகின்றன. பூச்சிக்கொல்லிகளுக்கு மிக அதிகப்படியான விளம்பரம், சந்தைப்படுத்துதல் அனுமதிக்கப்பட்டிருப்பதால் விவசாயிகள் ஏமாந்து அவற்றுக்குப் பலியாகின்றனர் என்று சுட்டிக்காட்டுகிறார் பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பைச் சார்ந்த வி.எம். பார்த்தசாரதி.
“தமிழக அரசு இந்த விஷயத்தில் இதுவரை எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பூச்சிக்கொல்லி விஷ பாதிப்பு விஷயத்தில் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய முறையான விசாரணையை நடத்த வேண்டும். இதன் மூலம் வருங்காலத்திலாவது இதுபோன்ற மரணங்களைத் தடுக்க முடியும். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வதற்கான உரிமையைப் பூச்சிக்கொல்லிகள் பறித்துள்ளன. மேலும், பி.டி. பருத்தியை பூச்சியே தாக்காது என்றார்கள்.
இப்போது அதில் பூச்சிக்கொல்லி பயன்படுத்துவதால் வரும் விளைவு இது என்பது தெளிவாகியுள்ளது. இதனால், மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தின் தோல்வி குறித்தும் விசாரிக்க வேண்டியுள்ளது” என்கிறார் பெரம்பலூர் இயற்கை வேளாண்மை இயக்கத்தைச் சார்ந்த ரமேஷ் கருப்பையா.
பூச்சிக்கொல்லி விஷ பாதிப்பு விஷயத்தில் பெரும்பாலும், பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கும் அணுகுமுறையைப் பூச்சிக்கொல்லி நிறுவனங்களும் அரசும் கடைப்பிடிப்பதுதான் இதில் வேதனை.
நம் விவசாயிகளின் சமூகப் பொருளாதாரச் சூழல், பூச்சிக்கொல்லி நிறுவனங்களின் சந்தைப்படுத்தும் முறைகள், அரசுத் துறைகளின் தோல்வி ஆகியவை பாதுகாப்பான பூச்சிக்கொல்லிப் பயன்பாட்டை அனுமதிப்பதில்லை. வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் இந்தியாவில் பெரும்பாலும் விற்கப்படுகின்றன. பெரம்பலூர் விஷ பாதிப்புக்குக் காரணமான பூச்சிக்கொல்லி நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய தமிழக அரசால் முடியும். ஆனால், பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்திருக்கும் விஷயங்களுக்கு அரசு இதுவரை எந்த எதிர்வினையும் ஆற்றாமலிருக்கிறது.
பெரம்பலூரில் நிகழ்ந்துள்ள விவசாயிகளின் மரணங்கள், மருத்துவமனைகளில் விவசாயிகள் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து உடனடியாக விசாரணை தேவை.
இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காத வகையில் தகுந்த தடுப்பு நடவடிக்கைகளும் தேவை. இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பூச்சிக்கொல்லி நிறுவனங்கள், முகவர்கள், வணிகர்கள் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், ரூ.5 லட்சமும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று வேளாண் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளது கவனத்துக்கு உரியது.
விவசாயிகளின் சர்ச்சைக்குரிய இந்த இறப்புக்குப் பிறகாவது அரசு விழிக்குமா?
கட்டுரையாளர், பூச்சிக்கொல்லி விஷ பாதிப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் மனுதாரர்களில் ஒருவர்
தொடர்புக்கு: organicananthoo@gmail.com