உத்தமபாளையம்: சின்னமனூர், உத்தமபாளையம் இருவழிச் சாலையில் சுற்றுலா வர்த்தகம் அதிக அளவில் நடைபெறு கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள வளமான விளைநிலங்கள் அழிக்கப்பட்டு வர்த்தகப் பகுதியாக மாற்றப்படுகின்றன.
தேனி மாவட்டத்தில் லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை 14,707 ஏக்கரில் இருபோக சாகுபடி நடைபெற்று வருகிறது. முல்லை பெரியாறு அணையின் தலைமதகு பகுதி என்பதால் இந்த இடங்கள் நீர்வளம் மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது. பாசனநீர் மட்டுமின்றி நிலத்தடி நீரும் செறிவாக உள்ளது.
இதனால் நெல் மட்டுமல்லாது கரும்பு, வாழை, தென்னை, மலர் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்பகுதி வழியாக திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. இதன் மூலம் தேனி மாவட்டத்தின் எல்லைப் பகுதியான தேவதானப்பட்டி முதல்லோயர் கேம்ப் வரை எந்த ஊருக்குள்ளும் செல்லாமல் புறவழிச் சாலையிலேயே வாகனங்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த வழித் தடத்தில் ஐயப்ப பக்தர்கள், தமிழக, கேரளா சுற்றுலா பயணிகள் அதிகளவில் பயணித்து வருகின்றனர். மேலும் இரு மாநில வாகனங்களும் அதிக அளவில் பயணிக்கின்றன. இதனால் இந்த புதிய சாலையில் ஹோட்டல், விடுதி, பேக்கரி உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டன.
மேலும் சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் நகருக்குள் உள்ள வியாபார நிறுவனங்களும் புறவழிச் சாலை பகுதிகளில் தங்கள் கடைகளை திறந்துள்ளன. இதுபோன்ற சூழ்நிலையால் புறவழிச் சாலையில் வர்த்தக நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதற்காக வளமான விளைநிலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தின் பிற பகுதிகளில் பாசனநீர் பற்றாக்குறை, மகசூல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை விவசாயிகள் எதிர்கொண்டு வருகின்றனர். ஆனால் கம்பம் பள்ளத்தாக்கு விளைநிலங்கள் விவசாயிகளை என்றுமே கை விட்டது இல்லை. விளைச்சலை அள்ளித்தந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் வர்த்தக நிறுவனங்களின் வரவால் இப்பகுதி விளைநிலங்கள் அழிக்கப்பட்டு கட்டிடங்களாக உருமாறி வருகின்றன.
இது குறித்து சின்னமனூரைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், இருவழிச் சாலை பயன்பாட்டுக்கு வந்ததில் இருந்தே வர்த்தக கட்டிடங்கள் அதிகரித்து விட்டன. மண்வளமும், நீர்வளமும், பருவநிலையும் சிறப்பாக உள்ள பகுதி இது. இதனால் விவசாயம் பொய்த்துப்போனதே இல்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விளைநிலங்களை வர்த்தகப் பகுதியாக மாற்றும் போக்கை தடுக்க வேண்டும் என்று கூறினர்.
உணவு உற்பத்தி பாதிப்பு: விளைநிலங்களை அவ்வளவு எளிதில் வர்த்தகப் பகுதியாக மாற்ற முடியாது. பல ஆண்டுகள் விளைச்சல் இல்லாத பகுதி, விவசாயத்துக்கு பலனளிக்காத நிலம் உள்ளிட்ட காரணங்களை ஆய்வு செய்தே கட்டுமானத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
ஆனால் அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் இங்கு விளை நிலங்களில் எளிதாக வர்த்தகக் கடைகள் அமைக்கப்படுகின்றன. இதனால் எதிர்காலத்தில் உணவுப் பொருள் உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.