பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில் புலி,கரடி, சிறுத்தை, செந்நாய் உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன. சோலைக் காடுகளும், பசுமை மாறாக் காடுகளும் உள்ளன.
இவற்றை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அக்காமலை புல்வெளி பகுதியை மத்திய அரசு தேசிய பூங்காவாக அறிவித்துள்ளது. வனத்தையும் அவற்றில் வாழும் வன விலங்குகளையும் பாதுகாக்க வனத்துறையினர் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
அவற்றின் ஒரு பகுதியாக மனித-விலங்கு மோதலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமீப காலமாக வால்பாறை நகர் மற்றும் தேயிலை தோட்ட பகுதியில் திறந்த வெளியில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால் அப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, “இறைச்சிக் கழிவுகளை திறந்த வெளியில் கொட்டுவதால் அவற்றைத் தேடி சிறுத்தை அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைகிறது. தனியார் தேயிலை தோட்ட நிர்வாகங்கள் இதை கண்காணித்து, இறைச்சிக் கழிவுகளை திறந்தவெளியில் கொட்டுவதை தவிர்க்க தொழிலாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
திறந்த வெளியில் செயல்படும் இறைச்சிக் கடைகள் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைகளில் இருந்து வெளியாகும் இறைச்சிக் கழிவுகளை திறந்த வெளியில் கொட்டுவதை தவிர்த்து பாதுகாப்பாக குழி தோண்டி புதைக்க வேண்டும். இதனால் வன விலங்குகள் இறைச்சிக் கழிவுகளை தேடி குடியிருப்பு பகுதிக்கு வருவது தவிர்க்கப்படும்.
மனித - வனவிலங்கு மோதல் தடுப்பு குழுவிற்குமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எச்சரிக்கை மீறி திறந்தவெளியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டினால் வன உயிரின பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.