சுற்றுச்சூழல்

இளையான்குடி அருகே தானமாக கொடுத்த ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தில் கிராம மக்களே உருவாக்கிய ஊருணி

இ.ஜெகநாதன்

இளையான்குடி: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை தானம் கொடுத்து, கிராம மக்களே உருவாக்கிய ஊருணியால் 10 ஊர்களைச் சேர்ந்த மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இளையான்குடி ஒன்றியத்தில் பெரும்பாலான கிராமங்கள் மிகவும் வறட்சி பகுதியாக உள்ளன. மேலும் நிலத்தடி நீரும் உவர்ப்பாக இருப்பதால், குடிநீருக்கு மட்டுமின்றி, குளிக்க போன்ற இதர தேவைகளுக்கு சிரமமடைந்து வருகின்றனர்.

ஆனால், இதை வண்டல் ஊராட்சி தெற்கு வண்டல் மக்கள் ஒருங்கிணைந்து மாற்றி காட்டினர். இங்கு 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்துக்கு கண்மாயில் அமைந்துள்ள கிணறு மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குளிக்க போன்ற இதர தேவைகளுக்கு அங்குள்ள கண்மாயை முழுமையாக நம்பி இருந்தனர்.

விவசாயப் பணிகளுக்கு தண்ணீர் எடுப்பதால் சில மாதங்களிலேயே கண்மாய் வற்றிவிடும். இதனால் கிராம மக்கள் தண்ணீருக்காக சிரமமடைந்து வந்தனர். இதையடுத்து மழைக்காலங்களில் அதிகளவில் தண்ணீர் ஓடக் கூடிய பகுதியை கண்டறிந்து புதிதாக ஊருணி அமைக்கத் திட்டமிட்டனர்.

இதற்காக 17 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ரூ.1 கோடி மதிப்புள்ள 2 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தனர். மற்றவர்கள் ரூ.2.85 லட்சம் நன்கொடை கொடுத்தனர். அத்துடன் பிரதான் தொண்டு நிறுவனம் ரூ.3 லட்சம் கொடுத்தது. இந்த நிதி மூலம் வரத்துக் கால்வாயுடன் கூடிய 60 மீ. நீளம், 52 மீ. அகலம், 2 மீ. ஆழத்தில் ஊருணியை உருவாக்கினர்.

தற்போது இந்த ஊருணியில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இங்கு தெற்கு வண்டல் மட்டுமின்றி வடக்கு வண்டல், மாடக்கோட்டை, மரக்கன் குடியிருப்பு, குறிச்சி, முத்தூர் உள்ளிட்ட 10 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குளிக்க, துணி துவைக்க பயன்படுத்தி வருகின்றனர்.

மா.முத்துக்குமார்

இது குறித்து வண்டல் ஊராட்சித் தலைவர் மா.முத்துக்குமார் கூறுகையில் ‘‘ எங்கள் ஊராட்சியில் நிலத்தடி நீர் உவர்ப்பாக உள்ளதால் ஆழ்துளை கிணறுகள் அமைப்பதில் சிக்கல் உள்ளது. மேலும் ஊருணி அமைப்பதற்கு ஊராட்சி மூலம் நிதி ஒதுக்க முடியாது. அதனால் ஊர் மக்களே இணைந்து இந்த ஊருணியை உருவாக்கினோம். தற்போது இந்த ஊருணி மூலம் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த மக்களும் பயனடைந்து வருகின்றனர்’’ என்று கூறினார்.

SCROLL FOR NEXT