ஈரோடு: கோபியை அடுத்த கொங்கர் பாளையத்தில் கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்ப கத்திற்கு உட்பட்ட, தூக்க நாயக்கன்பாளையம் வனச்சரகப் பகுதியில் கொங்கர்பாளையம் உள்ளது. இப்பகுதியில் உள்ள வெள்ளக்கரடு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை ஒன்று, கால்நடைகளை வேட்டையாடி வந்தது. இப்பகுதியில் கேமரா பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறை உறுதி செய்தது.
இதையடுத்து, வனத்துறை சார்பில் வைக்கப்பட்ட கூண்டில், நேற்று சிறுத்தை சிக்கியது. பிடிபட்ட பெண் சிறுத்தைக்கு 3 முதல் 4 வயது வரை இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து, மூலப்பட்டி பகுதியில் உள்ள அடர்வனப்பகுதியில், சிறுத்தை விடுவிக்கப்பட்டது.