சுற்றுச்சூழல்

எல்லைகளை வகுத்து வாழும் சாம்பல் நிற அணில்கள் @ பரப்பலாறு அணை

ஆ.நல்லசிவன்

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து மலைச்சாலையில் 14 கொண்டை ஊசி வளைவுகளை கடந்தால் பரப்பலாறு அணைப் பகுதியை அடையலாம். இங்கு பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. தற்போது பரப்பலாறு அணையைச் சுற்றுலாத் தலமாக்கும் திட்டத்துக்கான அறிவிப்பு வெளி யாகியுள்ளது.

கொடைக்கானல் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட ஒட்டன்சத்திரம், பழநி வனப் பகுதியில் பல வகையான விலங்குகள் வாழ்கின்றன. அவற்றில் குறிப்பாக, வடகாடு, சிறுவாட்டுக் காடு, பால்கடை, புலிக்குத்திக் காடு, பாச்சலூர், தாண்டிக்குடி பகுதியில் சாம்பல் நிற அணில்கள் அதிக அளவில் வாழ்கின்றன.

ஒட்டன்சத்திரம் முதல் பாச்சலூர் வரை செல்லும் வழியில் ஓங்கி உயர்ந்து வளர்ந்துள்ள மரங்களில் ஓய்வெடுக்கும் சாம்பல் நிற அணில்களைப் பார்க்கலாம். அணில்களில் சற்றுப் பெரியது இந்த சாம்பல் நிற அணில். முதுகுப்பகுதி சாம்பல் நிறத்திலும், மூக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் அடர்த்தியான முடியுடன் வால் மிக நீண்டு காணப்படும்.

புதிய அனுபவம்: திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை, கொடைக்கானல் சென்று அலுத்துப்போனவர்களுக்கு ஒட்டன்சத்திரம் முதல் பாச்சலூர், தாண்டிக்குடி பயணம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, ‘பச்சை நிறமே.. பச்சை நிறமே’ என பாடக்கூடிய எண்ணத்தைத் தூண்டும் வகையில் எந்தத் திசையில் பார்த்தாலும் பசுமை, அடர்ந்த வனப்பகுதி, ரம்மியமான அமைதி, மாசுபடாத காற்று, போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலை, இதமான தட்பவெப்ப நிலை என இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டே செல்லலாம்.

உலகில் உள்ள சாம்பல் நிற அணில்களில் அதிக அளவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தான் உள்ளன. தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அடுத்தபடியாக கொடைக்கானல், பாச்சலூர், பழநி வனப்பகுதிகள் சாம்பல் நிற அணில்களின் கோட்டையாகத் திகழ்கின்றன. இந்த வகை அணில்கள் மிக உயரமான மரங்களில் வாழும் தன்மை உடையவை. மிகவும் அரிதாகவே தரைப்பகுதிக்கு வரும். மரத்துக்கு மரம் தாவும். பழங்கள், விதைகள், பூச்சிகள், சில வகை மரங்களின் பட்டைகளை உணவாக உண்கின்றன.

புலியைப் போன்று...: பொதுவாக இவை தனித்தும், சில நேரங்களில் துணையுடன் காணப்படும். ஒவ்வொரு அணிலும் இரண்டு கூடு கட்டி வாழும். இதற்குக் காரணம், ஒரு கூடு பழுதானால் உடனே மற்றொரு கூட்டில் வசிக்கத் தொடங்கும். பகலில் அனைத்து வேலைகளையும் செய்யும். இரவில் கூடுகளில், மரக்கிளைகளில் உறங்கும். இவற்றின் கூடு மரத்தின் உச்சியில் இருக்கும்.

புலிகளைப் போல் இந்த அணில்கள் தனக்கென்று எல்லைகளை வகுத்து வாழும். ஆண்டுக்கு ஒரு குட்டி மட்டுமே ஈனும். சாம்பல் நிற அணில் மட்டுமின்றி கருப்பு, பழுப்பு வண்ணத்தில் மலபார் அணில்களையும் இந்த மலைப் பகுதியில் பார்க்கலாம். இயற்கை அழகு கொஞ்சும் ஒட்டன்சத்திரம் முதல் பாச்சலூர் வரை ஒருமுறை சென்று வரலாம்.

SCROLL FOR NEXT