கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே அல்லி மலர்கள் பூத்துக் குலுங்குவதால் ஏரியின் மிளிரும் அழகை அவ்வழியாகச் செல்லும் மக்கள் ரசித்து மகிழ்ந்து வருகின்றனர்.
வேப்பனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் அரியனப்பள்ளி. இக்கிராமம், வேப்பனப் பள்ளியிலிருந்து ஆந்திரா மாநிலம் செல்லும் சாலையில் உள்ளது. இப்பகுதியில் உள்ள ஏரியில் கடந்த இரு ஆண்டுக்கு முன்னர் வரை போதிய மழையின்றி நீரின்றி புதர்மண்டி கிடந்தது. மேலும், ஏரி நீராதாரத்தை நம்பியிருந்த விளை நிலங்களில் சாகுபடியின்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக வேப்பனப் பள்ளி சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த தொடர் மழையால், ஏரி நிரம்பியது. தற்போது, ஏரி நீரில் ஒருபுறம் தாமரையும், மறுபுறம் அல்லி மலர் கொடிகள் ஆக்கிரமித்து மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதனால், கடந்த காலங்களில் வறண்ட பூமியாக இருந்த ஏரி தற்போது நீரில் மிதக்கும் அல்லி மலர்களின் அழகு அவ்வழியாகச் செல்வோரின் பார்வையை ஈர்த்து வருகிறது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, “ஏரி நீரில் அல்லி மலர்கள் மிதப்பதை இவ்வழியாகச் செல்லும் மக்கள் பார்த்து ரசிப்பதுடன், மலர்களைப் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்” என்றனர்.