ராமநாதபுரம்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கூற்றுப்படி, தனது வாழ்நாளில் ஒரு கோடி மரக்கன்றுகள் நட திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்.
ராமநாதபுரம் ஓம் சக்தி நகரைச் சேர்ந்த ஷேக் தாவூதி - தவுலத் நிஷா தம்பதியின் மகன் சாகுல் ஹமீது (32). வறுமையான சூழ்நிலையில், தனது தாய் மாமா உதவியுடன் பி.காம். படிப்பை முடித்த இவர், 2010 முதல் 2 ஆண்டுகள் சவுதி அரேபியா நாட்டில் வேலை பார்த்துவிட்டு, தாய் நாட்டிலேயே உழைக்க வேண்டும் என்ற நோக்கில் நாடு திரும்பினார். கடந்த 2012-ல் நண்பர் உதவியுடன் சொந்தமாக ஒரு ஆட்டோ வாங்கி ஓட்டத் தொடங்கினார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் புத்தகங்களை படித்து அவரது அறிவுரையால் ஈர்க்கப்பட்ட சாகுல் ஹமீது, பூமி வெப்பமடைவதைத் தடுக்கும் நோக்கில் கோடி மரக் கன்றுகளை நட்டு, கோடி புண்ணியம் தேட உள்ளார்.
இது குறித்து சாகுல் ஹமீது கூறியதாவது: கல்லூரியில் படிக்கும்போதே ரத்த தானம் போன்ற சமூகப் பணிகளில் ஈடுபட்டேன். பின்னர் அப்துல் கலாம் அறிவுரைபடி, பசுமை இந்தியா, பசுமை தமிழகம், பசுமை ராமநாதபுரம் என்ற நோக்கில், தமிழகம் முழுவதும் ஆட்டோவில் மரக் கன்றுகளை எடுத்துச் சென்று பள்ளி, கல்லூரி, பொது இடங்களில் நடுவதும், பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கியும் வருகிறேன்.
அவ்வப்போது ஏழைகளுக்கு சாப்பாடு, மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கி தருகிறேன். கரோனா கால கட்டத்தில் வீட்டிலேயே உணவு தயாரித்து, அரசு மருத்துவமனை நோயாளிகள், சாலையோரவாசிகளுக்கு உணவு வழங்கினேன். எனக்கு ஒரு நாளைக்கு ரூ.1500 வருமானம் கிடைக்கிறது.
இதில், வீட்டுக்கு ரூ.600 போக மீதியை இந்த சமூக சேவைகளுக்கு பயன்படுத்துகிறேன். பிறக்கும் போது நாம் எதையும் எடுத்து வரவில்லை, இறக்கும்போதும் நாம் எதையும் எடுத்துச் செல்லப் போவதில்லை. அதனால் இடைப்பட்ட காலத்தில் இந்த சமுதாயத்துக்கு எதாவது செய்ய வேண்டும் என கருதுகிறேன்.
சமூக வலைதளங்களில் என் சேவையை பார்த்து இளைஞர்கள் பலரும் அதேபோல் செயல்படுகின்றனர். ஆட்டோவிலேயே கேரளாவின் கொல்லங்கோடு பகுதிக்குச் சென்று 200 மரக்கன்றுகளை நட்டும், மாணவர்களுக்கும் வழங்கினேன். மக்கள் வெயிலுக்கு நிழலை தேடிச் செல்கின்றனர். ஆனால், மரக்கன்றுகள் நட முன்வருவதில்லை.
மரம் நடும் பணி மக்கள் இயக்கமாக மாறவேண்டும். அதேபோல், அனைவரும் ரத்த தானம் செய்ய வேண்டும். ஆகஸ்ட் 20-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆட்டோவிலேயே ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள உள்ளேன். இதுவரை 2.17 லட்சம் மரக் கன்றுகள் நட்டும், வழங்கியும் உள்ளேன். அப்துல் கலாமின் கூற்றுப்படி, எனது வாழ்நாளில் ஒரு கோடி மரக் கன்றுகளை நட திட்டமிட்டுள்ளேன் என்றார்.