சுற்றுச்சூழல்

தமிழகத்தில் வெப்ப அலையால் இந்த ஆண்டு 12 பேர் மரணம்; இந்திய அளவில் 264 பேர் உயிரிழப்பு

கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: தமிழகத்தில் வெப்ப அலையால் இந்த ஆண்டு 12 பேர் மரணம் அடைந்தனர். 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மரணங்களில் எண்ணிக்கை உச்சத்தை அடைந்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். மார்ச் மாதம் வெயில் தொடங்கி ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயில் உச்சத்தில் இருக்கும். ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே இந்தியாவில் வெயிலின் தாக்கம் புதிய உச்சத்தை அடைந்தது. இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெப்பம் பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

மேலும், மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கடுமையான வெப்ப அலை இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதன்படி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை பாதிப்பு இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு வெப்ப அலை காரணமாக, இந்தியாவில் 264 பேர் மரணம் அடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதில் மூலம் தெரியவந்துள்ளது. இதில் அதிபட்சமாக கேரளாவில் 120 பேர், குஜராத்தில் 35 பேர், தெலங்கானாவில் 20 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுபோன்று தமிழகத்தில் கடந்த மாதம் முதல் வெப்பத்தின் பாதிப்பு அதிகமாக இருந்தது. சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, சென்னை, ராணிபேட்டை, வேலூர், திருத்தணி உள்ளிட்ட பல் இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை பதிவானது. சென்னை மீனம்பாக்கத்தில் 108 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது. வெப்பம் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை வெப்ப அலையால் 12 மரணம் அடைந்ததாக மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதில் மூலம் தெரியவந்துள்ளது. இது கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவு உச்சம் ஆகும்.

கடந்த 2015 முதல் 2018-ம் ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் வெப்ப அலையால் ஒருவர் கூட மரணம் அடையவில்லை. 2019-ம் ஆண்டு ஒருவர் மரணம் அடைந்தார். 2020ம் ஆண்டு தரவுகள் இல்லாத நிலையில், 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளிலும் ஒருவர் கூட மரணம் அடையவில்லை. இந்நிலையில், 2023 ஜூன் மாதம் வரை 12 மரணம் அடைந்துள்ளதாக அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இது தொடர்பான எந்த தரவுகளும் எங்களிடம் இல்லை என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT