பொள்ளாச்சி: வனத்துறையும் இயற்கை பாதுகாப்பு அமைப்பும் இணைந்து மேற்கொண்ட முயற்சியால் வால்பாறையில் வனவிலங்கு - மனித மோதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக தவிர்க்கப்பட்டு, யானைகளால் மனித உயிரிழப்புகள் நடைபெறவில்லை.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும் தென்மேற்கு பருவ மழையின்போது பசுமை திரும்பியதும், கேரளா வனப் பகுதியில் இருந்து நூற்றக்கணக்கான யானைகள் வால்பாறைக்கு இடம்பெயர்வது வழக்கம். ஜூன் முதல் பத்து மாதங்களுக்கு மேலாக இந்தப் பகுதியில் முகாமிடும் யானைகள், வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு தேயிலைத் தோட்டங்களில் கூட்டமாகவும், தனித்தனியாகவும் முகாமிடுகின்றன.
பகல் நேரத்தில் தேயிலைத் தோட்டத்தை ஒட்டியுள்ள துண்டுச் சோலை காடுகளில் முகாமிடும் யானைகள், இரவு நேரத்தில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து, வீடு மற்றும் கடைகளை சேதப்படுத்துகின்றன. இந்நிலையில், வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும் கடந்த 1994 முதல் 2021 வரையில் யானை தாக்கி 48 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் தற்போது ஜூன் மாதம் வரை, வால்பாறையில் யானை தாக்கி ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதனால் வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, “வால்பாறையில், இயற்கை பாதுகாப்பு அமைப்பினர் வனத்துறையினருடன் இணைந்து செயல்படுவதால் சமீப காலமாக வன விலங்கு- மனித மோதல் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக, யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகள் குறித்து பொதுமக்களுக்கு வாட்ஸ்ஆப் வாயிலாக முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல, யானைகள் நடமாடும் பகுதியில் வன விலங்கு மோதல் தடுப்பு குழுவினர் முன்கூட்டியே சென்று கண்காணிப்பதால், வால்பாறையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக யானை தாக்கி யாரும் உயிரிழக்கவில்லை” என்றனர்.
இயற்கை ஆர்வலர்கள் கூறும்போது, “ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி ஆகிய நான்கு வனச்சரகங்களில் நூற்றுக்கணக்கான யானைகள் உள்ளன. இந்திய வன உயிர் பாதுகாப்பு அறக்கட்டளை, இந்தியாவில் நடத்திய ஆய்வில் யானைகளின் 88 பாரம்பரிய வழித்தடங்களை கண்டறிந்துள்ளனர். இந்தப் பாதைகளை யானைகள் அடிக்கடி பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதில் தென்னிந்தியாவில் யானைகளின் 20 பாரம்பரிய வழித்தடங்கள் அடங்கும்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பூனாட்சி, அட்டகட்டி, மேல் ஆழியாறு, வாட்டர் பால்ஸ் தேயிலை தோட்டப் பகுதி, சிலுவை மேட்டுக்கும் காடம்பாறைக்கும் இடைப்பட்ட பகுதி ஆகியன யானைகளின் பாரம்பரிய வழித்தடம் ஆகும். இது மட்டுமின்றி வால்பாறை, மானாம்பள்ளி பகுதியில் பல்வேறு யானை வழித்தடங்கள் உள்ளன. வால்பாறையில் பல ஆண்டுகளாக யானைகள் இடம் பெயரும் பாதைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் சில நேரங்களில் யானைகளால் மனிதர்கள் தாக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக இயற்கை பாதுகாப்பு அமைப்பின் சார்பில் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் சிவப்பு விளக்கு எரியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் யானைகளால் ஏற்படும் உயிரிழப்பு வெகுவாக குறைந்துள்ளது. வால்பாறையில் உள்ள பெரும்பாலான தேயிலை தோட்டங்களில் யானைகளின் வழித்தடம் அழிக்கப்பட்டு தேயிலை பயிரிடப்பட்டுள்ளது.
அத்துடன் தேயிலை தோட்டங்களில் விதிகளுக்கு புறம்பாக தங்கும் விடுதிகளும் கட்டப்பட்டுள்ளன. இது குறித்து தமிழக அரசு தனிக் குழு அமைத்து வால்பாறையை மறு சர்வே செய்து யானைகளின் வழித்தடங்களை மீட்க வேண்டும். சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் வால்பாறையில் யானைகள் உணவு மற்றும் நீர் தேவைக்காக இடம் பெயர்ந்து செல்லும் வழித்தடங்களை மீட்டால் தான் வனவிலங்கு மனித மோதலுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க முடியும்” என்றனர்.