சுற்றுச்சூழல்

பாம்பன் கடல் பகுதியில் பல்லாயிரக்கணக்கில் கரை ஒதுங்கிய விஷ தன்மையுள்ள பேத்தை மீன்கள்

செய்திப்பிரிவு

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே பாம்பன் மன்னார் வளைகுடா பகுதியில், கடந்த சில நாட்களாக விஷத் தன்மை கொண்ட பேத்தை மீன்கள் பல்லாயிரக் கணக்கில் இறந்து கரை ஒதுங்கி வருவதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மன்னார் வளைகுடா, பாக் நீரிணை மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் பப்பர் பிஷ் என்ற மீன்கள் காணப் படுகின்றன. இந்த மீன்களை பலூன் மீன்கள் என்றும் அழைக்கின்றனர். இந்த பலூன் மீன்களின் உடல் குட்டையாகவும், தடித்து, உருளை வடிவத்திலும் இருக்கும். இவற் றின் மேல், கீழ் உதடுகள் மற்ற மீன்களை போலின்றி கடின மாகவும், அரைக்கோள வடிவிலும் இருக்கும்.

பலூன் மீன்கள் தன்னை தற்காத்துக்கொள்ள கடல் நீர் மற்றும் காற்றை உள்வாங்கி தனது உடலை 10 மடங்கு ஊதிப் பெருக்கும் ஆற்றல் வாய்ந்தது. இதனாலேயே, இதற்கு பலூன் மீன் எனப் பெயர் வந்தது. இதில் ஒருவகை மீன்களின் உடல் முழு வதும் முள்ளம்பன்றி போல முட்கள் காணப்படும். இதனால் முள்ளம் பன்றி மீன் எனவும் அழைப்பர்.

தமிழக மீனவர்கள் இவற்றை பேத்தை அல்லது பேத்தையன் என்று அழைக்கின்றனர். கொழு, கொழு என இருக்கும் மீனவக் குழந்தைகளை கடலோரப் பகுதி மக்கள் பேத்தை என்ற செல்லப் பெயரிட்டு அழைக்கும் பழக்கமும் காணப்படுகிறது. பேத்தை மீன்களின் கல்லீரல், கருப்பை, தோல் மற்றும் தசைகளில் டெட்ரோடோ டாக்ஸின் எனும் விஷப்பொருள் உள்ளது.

இந்த நச்சுப் பகுதிகளை நீக்கி விட்டு கைதேர்ந்த சமையல் காரர்கள் மூலம் சமைத்து ஜப் பான், சீனா, கொரியா நாட்டு மக்கள் இம்மீன் களை விரும்பி சாப்பிடுகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக ராமேசுவரம் அருகே பாம்பன் குந்துக்கால் மன்னார் வளைகுடா பகுதியில் பேத்தை மீன்கள் பல்லாயிரக்கணக்கில் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன. இது குறித்து மீன்வளத் துறை மற்றும் கடல்சார் ஆராய்ச்சி நிலைய ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வெப்ப மண்டல கடற்பகுதியான மன்னார் வளைகுடாவில் 10-க்கும் மேற்பட்ட பேத்தை மீன் இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் கோடை காலங்களில் இனப்பெருக்கத்துக்காக பேத்தை மீன்கள் கரை பகுதிகளில் அதிகளவில் காணப்படும்.

சமீப காலமாக கடலில் ஏற்படும் சூழலியல் மாற்றங்களால், பேத்தை மீன்கள் அதிக எண்ணிக்கை கொண்ட குழுக்களாக கரை ஒதுங்குவது உலகளவில் அதிகரித்து வருகிறது. மன்னார் வளைகுடா கரை யோரம் அதிகளவில் பேத்தை மீன்கள் இறந்து ஒதுங்குவது இதுவே முதல் முறையாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT