சுற்றுச்சூழல்

பேட்டையில் பருந்து வேட்டை - காரணமானவர்களை பிடிக்குமா வனத்துறை?

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி பேட்டையில் பருந்துகள் வேட்டையாடப்படுவது குறித்து விலங்கு ஆர்வலர்கள் வேதனைதெரிவிக்கிறார்கள். இப்பறவைகளை வேட்டையாடு வோரை வனத்துறையினர் பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறார்கள்.

திருநெல்வேலி மாநகராட்சியின் மேற்கு பகுதி எல்லையான பேட்டையில் விரிவாக்க பகுதிகளில் கட்டிடம் கட்டப்படாமல் தரிசாக இருக்கும் இடங்களில் மீண்டும் பருந்து வேட்டை நடைபெறுவதாக விலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். கோழிக் கழிவுகள் கொட்டப்படும் வெட்டவெளியில் அக்கழிவுகளை பரப்பி, அவற்றின்மீது கண்ணிகளை சிலர் வைத்துவிடுகிறார்கள்.

உணவுக்காக கீழே இறங்கிவரும் பருந்துகள் இந்த கண்ணிகளில் மாட்டிக்கொள்கின்றன. அவ்வாறு மாட்டிக் கொள்ளும் பருந்துகள், கருங்காகங்கள் போன்றவற்றை அதே இடத்தில் தீயிலிட்டு சுட்டு இறைச்சியை சாப்பிடுவதும், மீதமுள்ள இறைச்சியைக் கொண்டு செல்வதுமாக இப்பகுதியில் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இதனால், பருந்துகள் இனம் அழியும் தருவாயில் சென்று கொண்டிருப்பதாக விலங்கு நல ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

இது தொடர்பாக இப்பகுதியைச் சேர்ந்த திருநெல்வேலி மாவட்ட பொதுஜன பொதுநல சங்கத் தலைவர் முகம்மது அய்யூப் கூறியதாவது: பருந்துகள் வேட்டையாடப்படுவது குறித்து கடந்த சில மாதங்களுக்குமுன் வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தபோது, அவர்கள் இப்பகுதிக்கு வந்து பார்வையிட்டனர். கண்ணி வைத்தவர்களை எச்சரித்து அனுப்பியிருந்தனர்.

இப்போது மீண்டும் பருந்து வேட்டை தீவிரமாக நடைபெறுகிறது. இதை தடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். திருநெல்வேலி மாநகரில் விரிவாக்க பகுதிகளில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் பல்வேறு தீங்குகள் நேரிட்டு வருகின்றன. நாய்களை கொன்றும் சடலத்தை இப்பகுதியில் வீசிவிட்டு செல்கிறார்கள். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT