சுற்றுச்சூழல்

43 போராட்டங்கள்... 5 நீதிமன்ற வழக்குகள்... - வைகை ஆற்றை தூய்மையாக்க போராடும் தனியொருவன்!

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ஐந்து மாவட்ட மக்களின் பசியையும், தாகத்தையும் போக்கும் வைகை ஆறு தற்போது மணல் கொள்ளை, ஆக்கிரமிப்பு, கிளை நதிகள் மாயம், கழிவுநீர் கலப்பு என ஆண்டு முழுவதுமே வறட்சிக்கு இலக்காகி உள்ளது.

வைகை நதியைப் பாதுகாக்க, மதுரையில் தனியொருவனாக ராஜன் என்பவர், ‘வைகை நதி மக்கள் இயக்கம்’ என்ற ஒரு அமைப்பை நிறுவியுள்ளார். ஆட்சியர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுப்பதோடு, வைகை நதிக்காக இதுவரை 43 போராட்டங்களை நடத்தியுள்ளார். நீதிமன்றத்தில் 5 வழக்குகளை தொடர்ந்துள்ளார்.

ராஜன்

வைகை வடகரை, தென்கரையில் 2,500 வீடுகளில் வசிக்கும் மக்களிடம் ஆற்றை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பிரச்சாரம் செய்துள்ளார். விடுமுறை நாட்களில் வைகை நதி மக்கள் இயக்க தன்னார்வலர்களுடன், பொதுமக்களையும் திரட்டி வைகை ஆற்றில் கொட்டப்படும் பாலிதீன் குப்பையை அகற்றுதல், மரங்களில் ஆணிகளை அகற்றுதல், நீர்நிலைகளின் கரையோரம் மரக்கன்றுகளை நடுதல் போன்ற பணிகளையும் செய்து வருகிறார்.

2018-ம் ஆண்டு காந்தியவாதி அன்னா ஹசாரே, ராஜஸ்தான் மாநில தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் போன்றோரையும் மதுரைக்கு அழைத்து வந்து வைகை நதியை பாதுகாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி உள்ளார். பிரதமரின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியையொட்டி, தமிழக ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சமூக ஆர்வலர்களில் ராஜனும் ஒருவர். தற்போது மாநகராட்சியின் அன்றாட தூய்மைப்பணிகள் பட்டியலில் வைகை ஆற்றை சேர்க்க, போராடி வருகிறார்.

இது பற்றி ராஜன் கூறியதாவது: வைகை ஆற்றங்கரையோரம் வளர்ந்த நான், சிறு வயதில், நாள்தோறும் வைகை ஆற்றில் குளித்துவிட்டு பள்ளிக்குச் செல்வேன். அப்போதெல்லாம் வைகை ஆறு கழிவுநீர் கலக்காமல் தூய்மையாக இருக்கும். சுற்றுவட்டார கோயில் திருவிழாக்களுக்கு வைகை ஆற்றில் முளைப்பாரி எடுத்தல், சக்தி கரகம் வழிபாடு என அனைத்து விழாக்களும் ஆற்றை மையப்படுத்தியே நடக்கும்.

இதனாலேயே மதுரைக்கு திருவிழாக்களின் நகரம் என்ற பெயரும் வந்தது. மதுரையில் வசித்தவர்களுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை, அனைத்து சடங்குகளும் வைகை ஆற்றில்தான் நடக்கின்றன. பருவமழை காலங்களில் இரு கரைகளையும் தொட்டப்படி நீர் பொங்கி செல்லும் வைகை ஆற்றையும், வறட்சி காலங்களில் குப்பை இன்றி வளமையான மணல் பாங்கான ஆற்றையும் பார்த்துள்ளோம்.

தற்போது நகரமயமாக்கல், மக்கள்தொகை பெருக்கம் ஆகியவற்றால் பெருமளவு கழிவு நீர் கலப்பதால் வைகை ஆறு மாசுபட்டு உள்ளது. மேலும் ஆற்றில் உணவகங்களின் கழிவுகள், கட்டிடக் கழிவுகளையும் மனசாட்சியே இல்லாமல் கொட்டிச் செல்கின்றனர். ஆங்காங்கே பொதுமக்களும் வீட்டில் பூஜை செய்த பொருட்களையும் பாலிதீன் கவரில் வைத்து ஆற்றில் போட்டு செல்கின்றனர்.

இதனால் நான் சிறு வயதில் பார்த்த தூய்மையான வைகை ஆற்றை மீட்க, 2015-ம் ஆண்டு முதல் அதற்கான முயற்சிகளில் இறங்கினேன். இதற்காக ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மனு கொடுப்பேன். வைகை ஆற்றில் யாராவது மணல் திருடினாலோ, ஆக்கிரமிப்பு செய்திருந்தாலோ, காவல்துறைக்கும், பொதுப்பணித் துறைக்கும் உடனடியாக தகவல் கொடுப்பேன்.

இதற்கு பலனும் கிடைத்தது. தனி நபராக நான் மட்டும் போராடினால் போதாது. மக்களின் ஆதரவையும் பெற வேண்டும். அதற்காக வைகை நதி மக்கள் இயக்கம் என்ற அமைப்பை நிறுவினேன். அதன்மூலம் விழிப்பு ணர்வு, போராட்டம், நீதிமன்றத்தில் வழக்குகள் என வைகை நதியின் பாரம்பரியத்தை மீட்க தொடர்ந்து போராடி வருகி றோம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT