கோவை: கோவையில் உள்ள நீர்நிலைகளும், குளங்களும் ஆயிரக்கணக்கான பறவைகளுக்கு வாழ்விடமாக இருந்து வருகின்றன. அண்மைக்காலமாக குளங்களில் அதிகரித்த கழிவுநீர் கலப்பு, ஸ்மார்ட் சிட்டி, நொய்யல் புனரமைப்பு திட்டங்களால் கரைகளில் கான்கிரீட் அமைத்தது, பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கம் போன்ற காரணங்களால் குளங்களின் உயிர்ச்சூழல் சிதைந்து வருகிறது. கோவை மாநகருக்குள் உள்ள குளங்கள் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலும், நொய்யல் வழித்தடத்தில் உள்ள இதர குளங்கள் நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டிலும் உள்ளன.
இருப்பினும், குளங்களின் கரையை அழகுபடுத்தவும், கான்கிரீட் அமைக்கவும் கவனம் செலுத்திய மாநகராட்சியும், நீர்வள ஆதாரத்துறையும் அதில், கழிவுநீர் கலப்பு, பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கத்தை குறைக்கவும், தடுக்கவும் போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. இதன்காரணமாக கோவையில் உள்ள பெரும்பாலான குளங்கள் கழிவுநீர், பிளாஸ்டிக் கழிவுகள் தேக்க தொட்டிகள் போல மாறிவிட்டன. இதன்காரணமாக பல நீர்வாழ் பறவைகளின் வரத்தும், இனப்பெருக்கமும் குளங்களில் குறைந்துபோயுள்ளது.
அரிதாகிப்போன பறவைகள்: கோயம்புத்தூர் நேச்சர் சொசைட்டி (சிஎன்எஸ்) உறுப்பினர் பி.பாலாஜி கூறும்போது, “கிருஷ்ணாம்பதி குளத்தில் தென்பட்ட வெள்ளை அரிவாள் மூக்கன் பறவையானது சதுப்பு நிலங்களிலும், ஆழம் குறைந்த நீர்நிலைகளிலும் நடந்தபடி அலகால் துழாவித் துழாவிப் புழுக்கள், தவளைகள், சிறு பூச்சிகள் போன்றவற்றைக் கொத்தித் தின்னும். சிறுசிறு கூட்டமாக இரை தேடும் இயல்புடையது. தற்போது குளங்களில் கழிவுநீர் கலப்பு, பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கம் காரணமாக வேறு வழியில்லாமல் அதற்கு மத்தியில் இரைதேடும் நிலைக்கு அந்தப் பறவைகள் தள்ளப்பட்டுள்ளன.
பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ள பகுதியில் பறவைகள் இரைதேடும் போது, இரையுடன் சேர்ந்து பிளாஸ்டிக் கழிவையும் அவை உட்கொள்ள வாய்ப்புள்ளது. இதனால், உணவுக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு இறப்பு ஏற்படலாம்.
கழிவுநீர் உள்ளிட்ட காரணங்களால் நீரில் அதிகப்படியான மாசு ஏற்படும் போது, ஜீரணக்கோளாறு ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதிக மாசுள்ள இடத்தில் வாழும் பறவைகள் இனப்பெருக்கம் செய்யும்போது, முட்டை ஓடுகள் லேசாகி, குஞ்சு பொரிக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது. மேலும், இனப்பெருக்கம் செய்தாலும், அடுத்த தலைமுறை பறவைகள், பிறவிக் குறை பாடுடன் பிறக்கின்றன. செண்டு வாத்து, குள்ளத்தாரா ஆகிய இரண்டு வாத்து இனங்களும், நீர் சற்று மாசுபட்டிருந்தாலும் அங்கு இனப்பெருக்கம் செய்யாது. இதன் காரணமாக, கோவை குளங்களில் தற்போது இந்தப் பறவைகளை காண்பதே மிகவும் அரிதாகிவிட்டது” என்றார்.
எல்லா பகுதிகளிலும் தாழ்வான இடத்தில் இருப்பவை நீர்நிலைகள். எளிதாக அந்த பகுதியை நோக்கி குப்பை அடித்துச் செல்லப்பட்டுவிடுகிறது.
இதுகுறித்து கோவை குளங்களை காப்போம் அமைப்பின் செயலர் மோகன்ராஜ் கூறும்போது, “உள்ளாட்சி அமைப்புகள் வீட்டுக்கு வீடு தரம்பிரித்து குப்பையை சேகரித்தால் பிளாஸ்டிக் கழிவுகள் நீர்நிலைகளில் சென்று சேராது. எனவே, திடக் கழிவு மேலாண்மையில் உள்ளாட்சி அமைப்புகள் கூடுதல் கவனம் செலுத்துவதே இதற்கு நிரந்தர தீர்வாகும். நீர்வழிப்பாதைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அடைப்பால் குளங்களுக்கு நன்னீர் வரத்தும் தடைபடுகிறது. எனவே, தற்காலிக தீர்வாக பருவமழை தீவிரமாகும் முன்பாகவே நீர்வழிப்பாதைகள், நீர்நிலைகளில் தேங்கிய பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றார்.
மக்களின் ஒத்துழைப்பு தேவை: கோவை மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் கூறும்போது, “கிருஷ்ணாம்பதி குளத்துக்கு வரும் பிளாஸ்டிக் கழிவுகள், மற்ற பகுதிகளில் இருந்து அங்கு அடித்து வரப்படுகின்றன. எனவே, அங்கு கழிவுநீர் கலப்பு, பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பை தடுக்க இரண்டு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (எஸ்டிபி) அமைக்க திட்டமிடப்பட்டு, ஒரு எஸ்டிபி அமைப்பதற்கு தேவையான பணிகள் நடைபெற்று வருகின்றன. மற்றொரு எஸ்டிபி அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். மற்ற குளங்களில் இந்த அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பு இல்லை. ஆனால், கழிவுநீர் கலப்பு பிரச்சினை உள்ளது. இதற்காக வாலாங்குளம், உக்கடத்தில் அமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. எனவே, அந்த குளங்களுக்கு வரும் நீர்வழிப்பாதைகள் மூலம் கழிவுநீர் கலப்பு சற்று குறைந்துள்ளது. மேலும், குளத்துக்கு நீர்வரும் வழித்தடங்கள் அனைத்திலும் எஸ்டிபி அமைப்பது சாத்தியம் இல்லை.
எனவே, வீடுகளில் இருந்து பாதாள சாக்கடை மூலம் குளத்துக்கு நேரடியாக வரும் இணைப்புகளை துண்டித்து வருகிறோம். இரவு நேரங்களில் தொழில்நிறுவனங்களில் இருந்தும் கழிவுகள் வந்து கலக்கின்றன. அவற்றையும் கண்காணித்து வருகிறோம்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமும் இதுகுறித்து தெரிவித்துள்ளோம். திடக்கழிவு மேலாண்மைக்கு மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்” என்றார்.