திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோடை மழை கொட்டித் தீர்த்துள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் வாரத்திலேயே கோடை மழை பெய்தது. இதனால் கோடை காலத்திலேயே அணை நிரம்பிய நிகழ்வும் நடந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழையைத் தொடர்ந்து, வடகிழக்குப் பருவ மழையும் சராசரி அளவு பெய்து குடிநீர் பிரச்சினையைத் தீர்த்தது. விவசாயத்துக்கு போதுமான அளவு தண்ணீரும் இருந்தது. இதைத் தொடர்ந்து, கோடையில் வழக்கம்போல வறட்சி தலைதூக்குமோ என அஞ்சிய நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை மழை கொட்டித் தீர்த்தது.
மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மழை பொழிவு குறைவாக இருக்கும். ஆனால், அதற்கு மாறாக மழைக்காலம் போல கோடையில் பெரு மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு மார்ச்சில் மழையளவு 42.38 மி.மீ., ஏப்ரலில் 126.79 மி.மீ., மே மாதம் மழையளவு 156.32 மி.மீ. பெய்தது. இது சராசரி அளவைவிட ஒரு மடங்கு அதிகம். 50 ஆண்டுகால சராசரியைவிட அதிக அளவு மழை பெய்துள்ளது.
அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையிலும், மாவட்டத்தில் பல இடங்களில் கோடை மழை கொட்டியது. இதனால் பழநி அருகேயுள்ள வரதமாநதி அணை சில நாட்களுக்கு முன்பே நிரம்பியது. அணைகள், கண்மாய், குளம் என நீர் நிலைகளில் தற்போது பாதிக்கு மேல் தண்ணீர் உள்ள நிலையில், இந்த மாத இறுதியில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இந்த ஆண்டு மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்படாமலும், விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரும் உள்ளதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை மழையால் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.